கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் அடுத்த கிழக்கு நெசவாளர் காலனி பகுதியைச் சேர்ந்த ராசி என்ற பெண் இன்று (நவ.2) தனது மகள்களான அக்க்ஷயா(5), அனியா(3) ஆகிய இருவருக்கும் அளவுக்கு அதிகமான தூக்க மாத்திரைகளைக் கொடுத்து கொலை செய்துள்ளார். பின்னர், தனது உடலில் மண்ணெண்ணெயை ஊற்றி தீக்குளித்து உயிரிழந்தார்.
இச்சம்பவம் குறித்து அவரது உறவினர்கள் காவல் துறையினருக்குத் தகவலளித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் மூன்று பேரின் சடலத்தையும் மீட்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு உடல் கூராய்விற்காக அனுப்பி வைத்தனர்.
ராசியின் கணவர் ரஞ்சித்குமார் என்பவர் கடந்த ஆண்டு உடல்நிலை சரியில்லாமல் இறந்துள்ளார். பின்னர் தனது மாமனார், மாமியாருடன் வசித்து வந்த இவர், வருமானம் இல்லாமல், மாமனார் கூலிவேலை செய்து கிடைக்கும் வருமானத்தில் மிகவும் வறுமையான சூழலில் வாழ்ந்து வந்துள்ளார். இதனால் கடந்த சில நாட்களாக இவர் கடும் மன உளைச்சலில் இருந்ததால் இந்த முடிவை எடுத்ததாகத் தெரிகிறது. இதுகுறித்து நேசமணி நகர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், தற்கொலை செய்வதற்கு முன்பு ராசி எழுதிய கடிதமும் போலீசாருக்கு சிக்கியுள்ளது. அதில் கணவர் இறந்தபின் ஒரு வருஷம் டைம் கொடுத்த பின்னரே இந்த முடிவு எடுத்துள்ளதாகவும், இப்படி ஒரு வாழ்க்கை தன்னால் வாழ முடியாது என்றும், கணவரிடம் என்னை நல்லபடியாக அனுப்பி வைக்குமாறும் ராசி உருக்கத்துடன் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.