நடிகர் விஜய் வீட்டில் சோதனை நிறைவு பெற்ற நிலையில், நீதிமன்றத்தில் வழக்கு தொடரலாம் என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி தெரிவித்துள்ளார்.
ஏஜிஎஸ் படம் தயாரிப்பு நிறுவனம் , அதேபோல சினிமா பைனான்சியர் அன்புச்செழியன் , பிகில் பட விநியோகஸ்தர்கள் , நடிகர் விஜய் என வீடு அலுவலகங்கள் உட்பட 38 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். கடந்த இரண்டு நாட்களாக இந்த சோதனை நடந்து கொண்டிருக்கிறது. இதில் சினிமா பைனான்சியர் அன்புசெழியனுக்கு சொந்தமான சென்னை , மதுரை ஆகிய இடங்களில் நடந்த சோதனையில் பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டாக வருமான வரித்துறையினர் தெரிவித்தனர்.மேலும் கணக்கில் காட்டாத 300 கோடி ரூபாய் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் , 77 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிவித்தனர்.
நெய்வேலியில் மாஸ்டர் படப்பிடிப்பில் இருந்த விஜயை அழைத்து வந்த வருமான வரித்துறையினர் 23 மணி நேரமாக நடிகர் விஜய் வீட்டில் சோதனை செய்தனர். சாலிகிராமம் , நீலாங்கரை ஆகிய இடங்களில் உள்ள விஜய் வீட்டில் நேற்று முதல் தற்போது (இரவு 9 மணி) வரை நடந்த சோதனை நிறைவு பெற்றதாக வருமானவரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதில் நடிகர் விஜய் சம்பளம் குறித்து விசாரித்ததாகவும் , அவரிடமும் , அவரின் மனைவியிடம் வாக்குமூலம் பெற்றதாகவும் வருமானவரித்துறையினர் தெரிவித்தனர். ஆனால் இந்த சோதனையில் எதுவுமே சிக்கவில்லை. சொல்லப்போனால் ஒரு ரூபாய் கூட கிடைக்கவில்லை.
இந்தநிலையில் இதுகுறித்து பாஜகவின் மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி கூறுகையில், சில பேர் பொறாமையில் வருமானவரித்துறையினரிடம் கூறியிருப்பார்கள். படப்பிடிப்பில் இருந்து வருமானவரித்துறையினர் அழைத்து வந்தது சரியில்லை என்றால் விஜய் நீதிமன்றத்தில் வழக்கு தொடரலாம். வழக்கறினரிடம் ஆலோசனை செய்துவிட்டு வழக்கு தொடரலாம் என்றார். மேலும் ஒன்றும் இல்லையென்றால் விஜய் ஏன் கவலைப்பட வேண்டும் என்று தெரிவித்தார்.