குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இடதுசாரி கட்சிகள் சார்பாக டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தப்பட்டது. இதில் கலந்துகொண்ட காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மணிசங்கர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, “போராட்டம் மக்களின் ஒற்றுமையை காட்டுகிறது. இஸ்லாமியர்கள் மட்டுமின்றி போராட்டத்தில் அனைத்து மதத்தவரும் கலந்துகொண்டனர். மதச்சார்பற்ற கொள்கையின் மீது மக்கள் நம்பிக்கை வைத்திருப்பது இதன் மூலம் தெரிகிறது” என்றார்.
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக மக்களை காங்கிரஸ் கட்சி தூண்டிவிடுவதாக குற்றச்சாட்டுகள் எழுகிறதே என செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு, யாரும் மக்களை தூண்டிவிடவில்லை. எனது தனிப்பட்ட விருப்பத்தின் பேரில் நான் போராட்டத்தில் கலந்துகொண்டுள்ளேன். காங்கிரஸ் கட்சி என்னை ஓரங்கட்டியுள்ளது என பதிலளித்தார்.
காங்கிரஸ் கட்சி சார்பாக மக்களவைக்கு மூன்று முறையும், மாநிலங்களவைக்கு ஒரு முறையும் தேர்ந்தேடுக்கப்பட்டவர் மணிசங்கர். ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி நடந்தபோது, இவர் அமைச்சராகவும் இருந்துள்ளார்.