தொடர்ந்து 2வது நாளாக இந்திய பங்குச் சந்தை வர்த்தகம் ஏற்றத்துடன் முடிந்துள்ளது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 622 புள்ளிகள் உயர்ந்து 30,819 புள்ளிகளானது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 187 புள்ளிகள் உயர்ந்து 9,076 புள்ளிகளில் முடிந்தது.
மும்பை பங்குச் சந்தையில் இன்று காலையில் வர்த்தகம் தொடங்கியது முதலே சென்செக்ஸ் குறியீடு 217.69 புள்ளிகள் உயர்ந்து 30,524.53 ஆக அதிகரித்திருந்தது. இது 0.72 விழுக்காடு உயர்வாகும். தேசிய பங்குச் சந்தையை பொறுத்தவரையில், நிஃப்டி குறியீடு 57.70 புள்ளிகள் உயர்ந்து 8,936.80ஆக அதிகரித்திருந்தது.
இது 0.65 விழுக்காடு உயர்வாகும். சர்வதேச பங்குச் சந்தைகளை பொறுத்தவரை, ஷாங்காய், ஹாங் காங் பங்குச் சந்தைகள் சரிவை சந்தித்துள்ளன. டோக்யோ, சியோல் பங்குச் சந்தைகள் முன்னேற்றம் கண்டுள்ளன. வால் ஸ்ட்ரீட் பங்குச் சந்தைகள் நேற்று இழப்புகளுடன் முடிவடைந்தன. நிஃப்டி குறியீடு முன்னேற்றம் அடைந்ததால் 9,000க்கும் அதிகமாக இன்று பதிவானது.
இதனால் பார்த், ஏர்டெல் நிறுவனப் பங்குகள் அதிக விலையேற்றத்தை சந்தித்தன. இந்நிறுவனப் பங்குகள் விலை, 11 சதவீதம் அதிகரித்தது. இதையடுத்து, ஓ.என்.ஜி.சி., அல்ட்ராடெக் சிமென்ட், ஐ.டி.சி., பவர்கிரிட், என்.டி.பி.சி., ஆகிய நிறுவன பங்குகள் அதிக விலை ஏற்றத்தை சந்தித்தன.மாறாக, இண்டஸ்இண்ட் பேங்க், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், எல் அண்டு டி., எஸ்.பி.ஐ., ஆகிய நிறுவன பங்குகள் விலை, சரிவை சந்தித்தன.