நீட் தேர்வில் தேர்ச்சி பெறும் அரசு பள்ளி மாணவர்களுக்கு தனி இடஒதுக்கீடு அவரச சட்டத்திற்கு தமிழக அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
முன்னதாக, சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அமைச்சரவை கூட்டம் தொடங்கி நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நீட் தேர்வில் வெற்றி பெறும் அரசு பள்ளி மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடு அதாவது தனி இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பான சிறப்பு சட்டம் குறித்து ஆலோசனை நடைபெறும் என தகவல் வெளியானது. கடந்த 8ம் தேதி நீட் தேர்வில் அரசு பள்ளி மாணவர்களுக்கு தனி இடஒதுக்கீடு வழங்குவது குறித்து முதல்வரிடம் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் தலைமையிலான குழு முதல்வர் பழனிசாமியிடம் அறிக்கை தாக்கல் செய்தது. இது குறித்து இந்த கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், இந்த அவசர சட்டத்திற்கு தமிழக அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. அரசு பள்ளியில் பயில கூடிய மாணவர்களுக்கு தனி இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக இந்த குழு அமைக்கப்பட்டது.
அரசு பள்ளிகளில் 1 முதல் 12ம் வகுப்பு வரை அவர்கள் படித்து வந்தால் அவர்கள் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் நீட் மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவர்கள் மருத்துவ படுப்புகளில் சேர்வதற்கு வழிவகை செய்ய குழு அமைக்கப்பட்டது. கடந்த மார்ச் 1ம் தேதி அமைக்கப்பட்ட இந்த குழுவில் சுகாதாரத்துறை, பள்ளிக்கல்வித்துறை, நீதித்துறை செயலாளர்கள், ஓய்வுபெற்ற துணைவேந்தர்கள், மருத்துவக்கல்லூரிகளை சார்ந்த பேராசிரியர்கள் ஆகியோர் உள்ளனர்.