ஜம்மு & காஷ்மீருக்கு வழங்கப்பட்டுவந்த சிறப்புத் தகுதி அளிக்கும் சட்டப்பிரிவு 370ஐ நீக்கப்பட்டு அம்மாநிலம் இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டன.அதன்படி, ஜம்மு & காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் சட்டப்பேரவை இருக்கும். லடாக் தனி யூனியன் பிரதேசமாக இருக்கும். அதற்குச் சட்டப்பேரவை இருக்காது என அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்புக்குப் பின்னர் ஜம்மு – காஷ்மீரில் இணைய தொடர்பும் தொலைபேசி தொடர்புகளும் முற்றிலுமாகத் துண்டிக்கப்பட்டன.
மேலும், முக்கியத் தலைவர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனர். பலர் முன்னெச்சரிக்கையாக கைதும் செய்யப்பட்டனர். அரசின் இந்த நடவடிக்கைக்கு நாடு முழுவதிலுமிருந்து எதிர்ப்புகள் கிளம்பின. மக்கள் அனைவரும் பெரும் சிரமத்துக்குள்ளாக்கப் படுவதாகக் குற்றச்சாட்டுகளும் எழுந்தன.இச்சூழலில், காஷ்மீரின் நிலையைச் சரிசெய்ய பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் பிரிவினைவாதிகளும் பயங்கரவாதிகளும் மக்களிடத்தில் பொய் பரப்புரை செய்து, கலவரத்தைத் தூண்ட முயல்வதாகவும் காவல் துறை தரப்பில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. மேலும், இங்கு மக்கள் அமைதியை விரும்புவதாகவும், அதுவே இவ்விடத்தில் நிலைபெற்றுள்ளது என்றும் கூறியுள்ளனர்.