சேறும் சகதியுமாக உள்ள சாலையை சீரமைக்ககோரி விவசாயிகள் மற்றும் கிராம மக்கள் நாற்று நட்டு நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள தலையாமங்கலம் கிராமத்தில் விளை நிலங்களுக்கு செல்லக்கூடிய சுமார் 3 கிலோமீட்டர் தூரமுள்ள ஏரிக்கரை வழியாக சாலை சேறும் சகதியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் இந்த சாலையின் வழியில் விவசாயிகள் நடந்து செல்ல முடியாமல் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
அதிலும் குறிப்பாக மழைக் காலங்களில் சாலையின் வழியே போக முடியவில்லை என்றும் சாகுபடிக்கு தேவையான பொருட்களை கொண்டு செல்ல முடியாத நிலையும் உள்ளது. ஆகவே இதனை சீரமைத்து மேம்படுத்தி தர வலியுறுத்தி விவசாயிகள் மற்றும் கிராம மக்கள் இந்த சாலையில் நாற்று நட்டு நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். எனவே மாவட்ட நிர்வாகம் துரித நடவடிக்கை எடுத்து இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.