சிம்ஸ் பூங்காவில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் வயதானவர்கள் செல்வதற்கு வசதியாக பாதை அமைக்கும் பணியானது தொடங்கியுள்ளது.
நீலகிரி மாவட்டத்திற்கு ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் கோடை சீசனை முன்னிட்டு ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம். இதனால் பல்வேறு வகையான நிகழ்ச்சிகள் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நடத்தப்படுகிறது. ஆனால் கொரோனா தொற்று காரணமாக கடந்த ஆண்டு கோடை சீசன் நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த ஆண்டு கோடை சீசன் நடைபெற இருப்பதால் சுற்றுலா தளங்களை தயார்படுத்தும் பணியானது நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இதனையடுத்து குன்னூரில் முக்கிய சுற்றுலாத்தளமான சிம்ஸ் பூங்காவை கோடை சீசனுக்காக தயார்ப்படுத்தும் பணியானது தொடங்கிவிட்டது. இதன் முதற்கட்டமாக சுற்றுலா பயணிகளை கவரும் வண்ணம் 3 லட்சம் மலர் செடிகள் நடவு செய்யப்பட்டு, பணியாளர்கள் அதனை பராமரிக்கின்றனர்.
இந்நிலையில் சிம்ஸ் பூங்கா மேடான பகுதியில் அமைந்துள்ளதால் வயதானவர்களும், மாற்றுத்திறனாளிகளும் அங்கு செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதற்கு தீர்வாக மாற்றுத்திறனாளிகள் சக்கர நாற்காலியில் பூங்காவின் நுழைவு வாயிலில் இருந்து ஏரிக்கரை வழியாக, குழந்தைகள் விளையாட்டுப் பிரிவு வரை செல்ல வசதியாக பாதை அமைக்கும் பணியானது மும்முரமாக தொடங்கியுள்ளது.
இதுபற்றி தோட்டக்கலைத் துறையினர் கூறும்போது, சிம்ஸ் பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள படிக்கட்டுகளில் ஏறுவதற்கு வயதானவர்களும், மாற்றுத்திறனாளிகளும் சிரமப்படுவதால் அவர்களின் வசதிக்காக பல லட்சம் ரூபாய் செலவில் பாதை அமைக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளனர். அதோடு சக்கர நாற்காலியிலேயே மாற்றுத்திறனாளிகள் பூங்காவை கண்டு ரசிக்கலாம் என்றும், வயதானவர்கள் நடந்து செல்வதற்கு ஏற்ற வகையில் பாதையானது அமைக்கப்படும் என்றும் கூறியுள்ளனர்.