தமிழ் சினிமாவில் ஒரு கால கட்டத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை பிரியாமணி. இவர் கார்த்தி நடிப்பில் வெளியாகிய “பருத்தி வீரன்” திரைப்படத்தில் சிறப்பாக நடித்ததன் மூலம் தேசிய விருதைப் பெற்றதோடு சிறந்த நடிகையாகவும் அறியப்பட்டார். இதனைத் தொடர்ந்து நினைத்தாலே இனிக்கும் மற்றும் ராவணன் உள்ளிட்ட பல படங்களில் நடித்து புகழ்பெற்றார். பின்பு படவாய்ப்புக்கள் குறையத் தொடங்கியதை அடுத்து தெலுங்கு சினிமாவில் அதிக ஆர்வம் செலுத்தி வருகின்றார். அந்த வகையில் தற்போது இயக்குநர் ராஜேஷ் ஆனந்த் லீலா இயக்கத்தில் “டாக்டர் 56” என்ற புதிய படத்தில் நடித்துள்ளார்.
இந்த திரைப்படத்தில் ரவீன், தீபக் ராஜ் ஷெட்டி, ரமேஷ் பட், யத்திராஜ், வீணா பொண்னப்பா, மஞ்சுநாத் ஹெக்டே, சுவாதி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். இப்படத்திற்கு “சார்லி 777” படத்திற்கு இசையமைத்த நோபின் பால் இசையமைக்கிறார். இப்படம் குறித்து இயக்குநர் ராஜேஷ் ஆனந்த் லீலா கூறியதாவது, “இது அறிவியல் சார்ந்த கிரைம் திரில்லர். தற்போது சமூகத்தில் நிலவிவரும் உண்மைச் சம்பவங்களை கொண்டு திரைக்கதை அமைத்திருக்கிறோம். நடிகை பிரியாமணி சி.பி.ஐ. அதிகாரியாக நடித்துள்ளார். இந்த கதையை சொல்லும்போதே பிரியாமணி மிகவும் பிரம்மிப்பானார்.
நேர்த்தியான சி.பி.சி. அதிகாரியாக நடிக்க தன்னை முற்றிலும் தயார்படுத்திக் கொண்டார். இந்த திரைப்படம் தமிழ் மற்றும் கன்னடத்தில் நேரடியாக எடுத்ததால் ஓரே காட்சிகளை மாற்றி மாற்றி எடுப்பதில் சவாலாக இருந்தது. விறுவிறுப்பான திரைக்கதை ரசிகர்களை அடுத்து என்ன நடக்கும் என்ற ஆர்வத்தை தூண்டும். பிரியாமணி தனது திருமணத்திற்கு பிறகு நடிக்கும் முதல் தமிழ் திரைப்படம் இது” என்று கூறினார். மேலும் இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் டிசம்பர் 9-ஆம் தேதி ஒரே நேரத்தில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.