சேவல் சண்டை சூதாட்டத்தில் ஈடுபட்ட 15 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பல்வேறு இடங்களில் சட்டவிரோதமாக சேவல்சண்டை நடைபெறுவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசாங்சாய்க்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சட்டவிரோதமாக சேவல் சண்டை சூதாட்டத்தில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். அந்த உத்தரவின்படி காவல்துறையினர் குருணைக்கள்பட்டி பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது சேவல் சண்டையில் ஈடுபட்டிருந்த 10 பேரை காவல்துறையினர் கைது செய்ததோடு அவர்களிடமிருந்த 10 சேவல்கள், ரூ.2 லட்சத்து 8 ஆயிரம் பணம் மற்றும் 5 நான்கு சக்கர வாகனங்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இதேபோன்று ஊத்துக்குளி பகுதியில் சேவல் சண்டை சூதாட்டத்தில் ஈடுபட்ட 2 பேரை கைது செய்ததோடு அவர்களிடமிருந்து ரூ.2 ஆயிரத்து 900 பணத்தையும் பறிமுதல் செய்தனர். இதனைத் தொடர்ந்து தாராபுரம் பகுதியில் சேவல் சண்டையில் ஈடுபட்ட 3 பேரை காவல்துறையினர் கைது செய்ததோடு அவர்களிடமிருந்து ரூ.4 ஆயிரம் பணத்தையும் பறிமுதல் செய்தனர்.