மும்பை அருகே ஓ.என்.ஜி சி நிறுவன ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் இருந்து 45 கி.மீ தூரம் உள்ள யுரானில் ஓ.என்.ஜி சிக்கு சொந்தமான எண்ணெய் மற்றும் எரிவாயு சுத்திகரிப்பு ஆலை உள்ளது. இந்த ஆலையில் இன்று காலை ஒரு பகுதி திடீரென தீ பிடித்து பரவியது. இதையடுத்து தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். சுமார் 2 மணி நேரத்துக்கு மேலாக போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.
ஆனால் தீ விபத்தில் 2 தீயணைப்பு வீரர் உட்பட 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பாதுகாப்புக் காரணங்களுக்காக இந்த ஆலையிலிருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள பகுதி சீல் வைக்கப்பட்டுள்ளது. தீக்காயங்களுடன் உள்ளவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்தின் காரணமாக எண்ணெய் சுத்திகரிப்பில் பாதிப்பில்லை என்று ஓ.என்.ஜி சி தெரிவித்துள்ளது.