கொரோனா வைரஸ் லாக் டவுனின் போது உத்தரபிரதேச மாநிலத்தில் காவல்துறையினரைத் தாக்கும் நபர்கள் மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் (என்எஸ்ஏ) கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அம்மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. முன்னதாக, உத்தரப்பிரதேச மாநிலம் முசாபர்நகர் உள்பட பல இடங்களில் காவல்துறையினர் மீது பொது மக்கள் தாக்குதல் நடத்தி வந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் முசாபர்நகர் பகுதியில் ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து மக்களை கண்காணிக்க ரோந்து பணிக்கு சென்ற காவலர்கள் மீது கிராம மக்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனால் பல காவலர்கள் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதேபோல பஞ்சாப் மாநிலம் சண்டிகரிலும் தெருவில் நடமாடிய மக்களை கட்டுப்படுத்த முயன்ற போது போலீசாருக்கும் அப்பகுதியின் அடுக்குமாடிக் குடியிருப்பு வாசிகளுக்கும் மோதல் ஏற்பட்டது.
இதன் காரணமாக ஆத்திரமடைந்த பொதுமக்கள் காவல்துறையினர் மீது கல்வீசித் தாக்குதல் நடத்தினர். இதில் பல காவல்துறையினர் படுகாயம் அடைந்தனர். இந்த நிலையில், ஊரடங்கு உத்தரவு சமயத்தில் காவலர்கள் மீது தாக்குதல் நடத்தும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை நடத்தப்படும் என உத்தரபிரதேச அரசாங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் தற்போது குடியிருப்பு பகுதிகளில் பரிசோதனை நடத்த வரும் மருத்துவர்களுக்கும் அதே கதி என்பது மிகவும் வேதனையான விஷயம்.