கைவிளக்கேந்திய காரிகை… செவிலியர்களுக்காக தனி மரியாதை உருவாக காரணமானவர்….!
ஃப்ளோரன்ஸ் நைட்டிங்கேல் அம்மையார். இவர் புளோரன்ஸ் நகரில் 1820ல் மே மாதம் 12ஆம் தேதி பிறந்ததால் அனைவரும் செவிலியர் தினமாக கொண்டாடுகின்றனர். சுகபோக வாழ்க்கையில் நாட்டமில்லாத ஃப்ளோரன்ஸ் தன் வாழ்நாளில் மனிதகுலத்திற்கு ஏதேனும் நன்மைகள் செய்ய வேண்டுமென்று சிறுவயதிலிருந்தே விருப்பம் கொண்டுள்ளார். அவருடைய 31வது வயதில் குடும்பத்தையும், சுகத்தையும் துறந்து நோயாளிகளையும், போர்களில் காயமடைந்தவர்களையும் கவனித்துக்கொள்ளும் தனது விருப்பத்தை நோக்கி பயணித்தார். ஜெர்மன் மற்றும் பிரான்சில் செவிலியர்களுக்கான அடிப்படை பயிற்சிகளை பெற்றார்.
தான் கற்றுக்கொண்ட பயிற்சியை வைத்து பிரிட்டிஷ் மருத்துவ மனையை மாற்றி அமைக்க முனைந்தார். நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும்போது மிகவும் முக்கியமான அம்சங்கள் தூய்மையும், தூய்மையான காற்றும் என்று நம்பினார். அவரின் சிந்தனைகளும் கோட்பாடுகளும் நாடு முழுவதும் பரவத் தொடங்கியது. 1854ம் வருஷம் செப்டம்பர் மாதம் கிரைமெய்யன் போர் வெடித்தது. போரில் படுகாயம் அடைந்தவர்களையும், உறுப்புகளை இழந்தவர்களையும் கவனிக்கும் முறை இல்லாமல் இருந்தது. நவம்பர் 4ம் தேதி போர் முகாமிற்கு 40 தேர்ந்தெடுக்கப்பட்ட செவிலியர்களுடன் வந்த ஃப்ளோரன்ஸ் தங்களது பணியை செய்யத் தொடங்கினார்கள்.
தங்களது பணியை செம்மைப்படுத்திக் கொள்ள மூன்று முறை போர் மூனைக்கும் செல்ல தயங்காமல் இருந்தார்கள். கடுமையாக உழைத்த அவர் கடுமையான நோய் ஏற்பட்ட போது தன் கூந்தலை இழந்தார்கள். போர் பணி முடிந்து அவர் 1856 ம் வருடம் இங்கிலாந்து திரும்பிய போது அந்த தேசமே அவரை கைகூப்பி வணங்கியது. 1858 ஆம் வருடம் ஒரு அறிக்கையை வெளியிட்டனர் அதுவே பிரிட்டிஷ் ராணுவ சுகாதாரத்திற்கு அடிப்படையாக அமைந்தது. தாதிமை துறையில் அவரின் அரிய சேவையை பாராட்டி இங்கிலாந்து ராணி “ஆர்டர் ஆஃ மெரிட்” என்கின்ற உயரிய பட்டத்தை 1907ம் வருடம் வழங்கி சிறப்பித்தார். அந்த விருதை பெற்ற முதல் பெண்மணி இவரே.
அதற்கடுத்து “ஃப்ரீடம் ஆப் த சிட்டி ஆஃப் லண்டன்” என்று உயரிய அங்கீகாரத்தை அவர் பெற்றார். இப்படிப்பட்ட ஃப்ளோரன்ஸ் நைட்டிங்கேல் அம்மையார் அவர்கள் 1910 ஆம் வருடம் ஆகஸ்ட் மாதம் 13ம் நாள் தன்னுடைய 90 ஆவது வயதில் இங்கிலாந்தில் காலமானார். அவர் நம்மைவிட்டுப் பிரிந்து இத்தனை வருடங்களாகியும் அவரின் புகழ் நமக்குள் நிலைத்துள்ளது. ஒவ்வொரு வருடமும் மே மாதம் 12ஆம் தேதி செவிலியர் தினத்தை கொண்டாடும் பொழுதும் செவிலியர்கள் அவரை நினைவு கொண்டு போற்றுகின்றனர்.