குடிநீருடன் கழிவு நீர் கலந்து வருவதால் ஊராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு கோஷமிட்டனர்.
தேனி மாவட்டத்தில் உள்ள கடுமலைகுண்டுவை அடுத்திருக்கும் ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இருக்கின்றது. இப்பகுதியில் குடிநீர் குழாய்களில் அடைப்பு ஏற்பட்டு குடிநீருடன் கழிவு நீர் கலந்து வருகின்றது. இதனால் மக்கள் காய்ச்சல், தொண்டை வலி, சளி என உடல்நிலை பாதிக்கப்படுகின்றது. இதன் காரணமாக பணம் கொடுத்து கேன்களில் தண்ணீர் வாங்கி குடித்து வருகின்றார்கள்.
இது குறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் தொடர்ந்து நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்து வந்த நிலையில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த மக்கள் கழிவு நீர் கலந்த குடிநீரை குடம் மற்றும் பாட்டில்களில் பிடித்து வந்து ஊராட்சி அலுவலகத்திற்கு முன் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டார்கள். அப்போது அலுவலகத்தில் தலைவர் உள்ளிட்ட யாரும் இல்லாததால் சிறிது நேரம் கோஷமிட்டு விட்டு அங்கிருந்து கலைந்து சென்றார்கள்.