Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

வடிகால் வசதி இல்லை… சாலைகளில் ஓடும் கழிவுநீர்… கோரிக்கை விடுத்த பொதுமக்கள்…!!

வடிகால் வசதி செய்து தர வேண்டி பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அரியலூர் மாவட்டத்தில் உள்ள கழுமங்கலம் ஊராட்சியில் சுமார் 600க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கழுமங்கலத்தில் உள்ள வடக்கு மற்றும் மேற்கு தெருவில் சரியான வடிகால் வசதி இல்லாததால் சாலையில் கழிவுநீர் தேங்கி சாலையும் சேதமடைந்துள்ளது. மேலும் அந்த வழியாக வாகனங்களில் செல்லும் போது சாலையில் நடப்பவர்கள் மீது கழிவுநீர் தெரிக்கிறது. மேலும் இந்த கழிவு நீரினால் கொசுக்கள் உற்பத்தி ஆகிறது.

இதனால் அப்பகுதி மக்களுக்கு டெங்கு மலேரியா உள்ளிட்ட நோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதுபற்றி அப்பகுதியில் வசிக்கும் மக்கள் கூறும்போது பல ஆண்டுகளுக்கு முன்பு இந்தப் பகுதியில் சாலை போடப்பட்டது. அப்போது அதிகாரிகள் வடிகால் வசதி செய்து தரவில்லை. இதனால் கழிவுநீர் சாலையில் தேங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு சாலையோரம் வடிகால் அமைத்து தர வேண்டும் என்று அப்பகுதி மக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |