திருவள்ளூர் அரசு தலைமை மருத்துவமனையின் இணை இயக்குநர் மீது எழுந்த பாலியல் குற்றச்சாட்டையடுத்து, அங்கு கூடுதல் இயக்குனர் விசாரணை நடத்தினார்.
திருவள்ளுர் மாவட்டத்தில் பொது சுகாதார ஊரக நலப்பணிகள் இணை இயக்குனராக பணிபுரிந்து வருபவர் தயாளன். இவர் அங்கு வேலைபார்க்கும் செவிலியர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாகவும், பணியிடமாற்றம் செய்யக்கோரி கேட்பவர்களிடம் லஞ்சம் பெற்றதாகவும், நோயாளிகளுக்குரிய மருந்துகளை வாங்குவதில் முறைகேடு செய்ததாகவும் புகார் எழுந்தது.
இதையடுத்து கூடுதல் இயக்குனரான மாலதி என்பவர் அரசு தலைமை மருத்துவமனைக்கு நேரில் சென்று, செவிலியர்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் என 10-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தினார். அதைதொடர்ந்து இணை இயக்குநர் தயாளனிடமும் விசாரணை மேற்கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.