ஈரோட்டில் 10 ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த 2 ஆசிரியர்களை பொதுமக்கள் அடித்து உதைத்து காவல்நிலையத்தில் ஒப்படைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டம் மகேந்திர மங்கலம் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் லட்சுமணன் சின்ன முத்து ஆகியோர் வரலாற்று ஆசிரியராக பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் இருவரும் அவ்வப்போது குடிபோதையில் பள்ளிக்கு வந்து பாடம் எடுப்பதால் மாணவர்களுக்கு இவர்களை கண்டாலே பிடிக்காது. இந்நிலையில் இருவரும் அதே பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவருக்கு பாலியல் தொல்லை அளித்து வந்துள்ளனர்.
மாணவியின் தனிப்பட்ட செல்போன் நம்பருக்கு காதல் கவிதைகள் ஆபாச வார்த்தைகள் படங்கள் வீடியோக்கள் உள்ளிட்டவற்றை அனுப்பி தொந்தரவு செய்துள்ளனர். இதனை வெளியில் யாரிடமாவது கூறினால் உனது பள்ளிப்படிப்பு முடிந்து விடும், மதிப்பெண்ணில் கை வைப்போம், உன் வாழ்க்கையை சீரழிப்போம் என்று மிரட்டியுள்ளனர்.
இதனால் யாரிடமும் வெளியில் சொல்லாமல் தவித்து வந்துள்ளார் மாணவி. இதையடுத்து நேற்று முன்தினம் மாலை இருவரும் மாணவியிடம் எல்லை மீறி நடந்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி வீட்டிற்கு சென்றதும் தனது தாய் தந்தையிடமும் நடந்த எல்லாவற்றையும் கூறி கதறி அழுதுள்ளார். இதையடுத்து நேற்று காலை 10.30 மணி அளவில் பள்ளியை முற்றுகையிட்ட ஊர்மக்கள் ஆசிரியர்கள் இருவரையும் சரமாரியாக அடித்து உதைத்து உள்ளனர்.
பின் தகவலறிந்த மகேந்திரமங்கலம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து இருவரையும் கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அங்கு திரண்டு சென்ற பொதுமக்கள் முற்றுகையில் ஈடுபட்டனர். இதையடுத்து அவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட போலீஸ் சூப்பிரண்ட் காவல்துறை உயரதிகாரி இருவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு முறையான விசாரணைக்கு பின் தக்க தண்டனை வழங்கப்படும் என்று உத்தரவாதம் அளித்ததன் பெயரில் பொதுமக்கள் கலைந்து சென்றனர். மேலும் பாதிக்கப்பட்ட மாணவி மகளிர் காவல் நிலையத்தில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டார். 2 பள்ளி ஆசியர்கள் மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.