சென்னை அயனாவரம் அருகே 60 வயதான மூதாட்டியை மர்மநபர் ஒருவர் நள்ளிரவில் வீடு புகுந்து பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை அயனாவரத்தில் தனது கணவருடன் 60 வயதான மூதாட்டி ஒருவர் வசித்து வருகிறார். இவரது கணவர் உடல்நிலை குறைவு காரணமாக படுத்த படுக்கையாக இருக்கிறார். இவர்களது வீடும் ஒரு பத்தி கொண்ட மிகச் சிறிய வீடுதான். ஆகையால் இடப்பற்றாக்குறை காரணமாக அவ்வப்போது தனது வீட்டிற்கு அருகே உள்ள உறவினர் வீட்டில் 60 வயதான மூதாட்டி போய் படுத்து உறங்குவது வழக்கம்.
அதன்படி, நேற்று தனியாக தனது உறவினர் வீட்டில் 60 வயதான மூதாட்டி படுத்திருக்க மர்ம நபர் ஒருவர் கதவைத் திறந்து மூதாட்டியின் வாயை பொத்தி மிரட்டி அவரை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு தப்பிச் சென்றுள்ளார். பின் இதுகுறித்து மூதாட்டி உறவினர்களிடம் தகவல் தெரிவிக்க சம்பவ இடத்திற்கு விரைந்து செல்ல, அங்கே அவர், ரத்த காயங்களுடன் வலியில் துடித்துக் கொண்டிருந்தார்.
பிறகு அவரை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்ல, மறுபுறம் காவல் நிலையத்திலும் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரை ஏற்று பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றப் பிரிவு காவல்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு தப்பிச்சென்ற மர்மநபரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.