இறைதூதர் என்று கூறி பெண்ணுக்கு ஒருவர் பாலியல் தொந்தரவு கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருச்சி மாவட்டத்திலுள்ள கே.கே நகர் பகுதியில் ஒரு பெண் வசித்து வருகிறார். இவர் கன்டோன்மென்ட் காவல் நிலையத்தில் ஒரு புகார் மனுவை அளித்துள்ளார். அந்த மனுவில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருச்சி நத்தர்ஷா பள்ளிவாசல் தெருவில் வசித்து வரும் பாரூக் என்பவர் இந்தப் பெண்ணுக்கு அறிமுகமாகியுள்ளார். அப்போது பாருக் தன்னை ஒரு மத போதகர் என்று அறிமுகப்படுத்தியுள்ளார். அதன் பிறகு சில வாரங்களில் மதரீதியான வகுப்பு எடுக்க வேண்டும் என பாருக் இந்த பெண்ணிடம் கூறியதால் அதற்கு அந்தப் பெண் சம்மதித்துள்ளார். இந்நிலையில் தன்னை இறைத் தூதர் என்றும், தான் என்ன கூறினாலும் அதனை அப்படியே செய்யவேண்டும் என கூறியுள்ளார்.
அப்போது மத வகுப்பு எடுப்பதாக கூறி பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதனை அடுத்து பாரூக் இந்த பெண்ணிடம் இருந்து 10 லட்சம் ரூபாய் ரொக்கம் மற்றும் 50 லட்சம் மதிப்புள்ள 70 பவுன் தங்க நகைகளை வாங்கிக் கொண்டு இந்தப் பெண்ணை கொடுமைப்படுத்தி உள்ளார். மேலும் பாரூக்கின் மனைவி மற்றும் உறவினர்கள் இதற்கு உடந்தையாக இருப்பதாகவும், இந்த புகாரின் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறும் அந்தப் பெண் மனுவில் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் இறைதூதர் என்ற பெயரில் மோசடியில் ஈடுபட்டபாரூக்கை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அவருடைய மனைவி மற்றும் உறவினரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.