பதினொன்றாம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு அவரது தந்தை மற்றும் நண்பர் போன்றோர் பாலியல் தொந்தரவு அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டத்தில் உள்ள துறையூர் பகுதியில் 15 வயது மாணவி ஒருவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் தனியார் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் வீட்டில் இருந்த இந்த மாணவி கடந்த 2-ஆம் தேதி திடீரென காணாமல் போனதால் அதிர்ச்சி அடைந்த மாணவியின் தாயார் உடனடியாக துறையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் காணாமல் போன மாணவி அவரது உறவினர் வீட்டில் இருப்பது தெரிய வந்துள்ளது.
இதனையடுத்து காவல்துறையினர் அந்த மாணவியை மீட்டு காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி உள்ளனர். அப்போது திடுக்கிடும் தகவல் வெளிவந்துள்ளது. அதாவது மின் வாரியத்தில் வேலை பார்க்கும் இந்த மாணவியின் தந்தை அடிக்கடி அவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதனால் மன உளைச்சலில் வீட்டை விட்டு வெளியேறிய அந்த சிறுமி தனது நண்பரின் வீட்டில் தங்கியுள்ளார்.
ஆனால் மாணவியின் நண்பரும் அவரிடம் தவறாக நடக்க முயற்சி செய்ததால் உறவினரின் வீட்டில் தஞ்சம் அடைந்ததாக மாணவி காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து முசிறி அனைத்து மகளிர் காவல் துறையினர் மாணவியின் தந்தை, அவரது நண்பர், உடந்தையாக இருந்த தோழி மற்றும் மற்றொரு நண்பர் ஆகியோர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்துள்ளனர்.