மருத்துவமனை பெண் ஊழியரை மிரட்டி வாலிபர் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு வந்த குடியாத்தம் பகுதியில் வசிக்கும் 25 வயது இளம்பெண் ஒரு புகார் மனுவை அளித்துள்ளார். அந்த மனுவில், இந்த இளம்பெண் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்து வருவதாக கூறியுள்ளார். இந்நிலையில் இளம்பெண்ணும், அவரது தாயாரும் வீட்டில் உள்ள குளியலறையில் குளித்துக் கொண்டிருந்த போது, அப்பகுதியில் வசிக்கும் ஒரு வாலிபர் அதனை வீடியோ எடுத்து இந்த இளம்பெண்ணிடம் காட்டி மிரட்டி உள்ளார்.
அப்போது தான் கூறுவதை செய்யவில்லை என்றால் இந்த இளம் பெண்ணின் தாயார் வீடியோவை இணையதளத்தில் வெளியிடுவதாக மிரட்டி உள்ளார். இதனால் பயத்தில் அந்த பெண் வேலூர் ஓட்டேரி பகுதியில் அந்த வாலிபரை சந்திக்க சென்றுள்ளார். அப்போது ஒரு அறையில் இளம் பெண்ணை அடைத்து வைத்து அந்த வாலிபர் இரண்டு நாட்கள் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனை தொடர்ந்து அதை செல்போனில் படம் பிடித்த அந்த வாலிபர் அந்த பெண்ணை மிரட்டி அடிக்கடி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
மேலும் மாதந்தோறும் இந்த பெண்ணிடமிருந்து 10 ஆயிரம் ரூபாயை வாங்கியுள்ளார். இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்ததும் காவல்துறையினர் அந்த வாலிபரை பிடித்து கடந்த நவம்பர் மாதம் சிறையில் அடைத்து விட்டனர். ஆனால் தற்போது சிறையில் இருந்து வெளியே வந்த அந்த வாலிபர் தன்னை கொலை செய்து விடுவதாக மிரட்டுவதாகவும், தான் பணிபுரிந்து வரும் மருத்துவமனைக்கு வந்து தன்னை தொந்தரவு செய்வதாகவும் தெரிவித்துள்ளார்.
அந்த வாலிபர் அந்த இளம்பெண்ணின் குடும்பத்திலுள்ள யாரையாவது வெட்டிக் கொலை செய்துவிடுவேன் என மிரட்டுவதால் அந்த வாலிபரிடம் இருந்து தன்னையும், தனது குடும்பத்தினரையும் காப்பாற்ற நடவடிக்கை எடுக்குமாறு அந்த இளம்பெண் மனுவில் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.