உடற்பயிற்சி கூடத்தை நடத்தி வருபவர் பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு அளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்திலுள்ள தாம்பரத்தில் பிரேம் ஆனந்த் என்பவர் தனியார் உடற்பயிற்சி கூடம் நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் உடற்பயிற்சி கூடத்திற்கு பயிற்சி செய்ய வந்த 27 வயது இளம்பெண்ணிடம் பிரேம் ஆனந்த் பாலியல் ரீதியாக அத்துமீறி நடந்து கொண்டுள்ளார். இதனால் அந்த பெண் உடனடியாக அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதனையடுத்து அந்த பெண்ணிடம் பிரேம் ஆனந்த் பேசிய செல்போன் உரையாடல் தற்போது சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. அந்த ஆடியோவில் பிரேம் ஆனந்த் நான் தவறு செய்துவிட்டேன் எனவும், நீங்கள் நேரில் வந்தால் காலில் விழுந்து மன்னிப்பு கேட்கிறேன் எனவும் அந்த இளம்பெண்ணிடம் கூறியுள்ளார்.
அதனை ஏற்க மறுத்த அந்த இளம்பெண் தான் பயிற்சிக்கு வர மாட்டேன் எனவும், கட்டணத்தை திரும்ப வழங்குமாறும் தெரிவித்துவிட்டு செல்போன் இணைப்பை துண்டித்து விட்டார். இதுகுறித்து அந்த இளம்பெண் ஆன்லைன் மூலம் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். இச்சம்பவம் பற்றி சேலையூர் உதவி கமிஷனர் கூறும் போது, பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்த போதும், அங்கு நடந்த விவரங்கள் குறித்து தெளிவாக குறிப்பிடாததால் வழக்கு பதிய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து அந்த பெண்ணிடம் கேட்டபோது கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு தனிமையில் இருப்பதாக காவல்துறையினரிடம் கூறியுள்ளார். இது குறித்து தொடர்ந்து விசாரணை நடந்து வருவதாக போலீஸ் கமிஷ்னர் தெரிவித்துள்ளார்.