மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்த குற்றத்திற்காக பள்ளியின் தாளாளரையும், உடந்தையாக இருந்த அவரது மனைவியையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருச்சி மாவட்டத்தில் உள்ள வண்ணாரப்பேட்டையில் சி.இ. நடுநிலைப்பள்ளி அமைந்துள்ளது. இங்கு ஜேம்ஸ் என்பவர் தலைமை ஆசிரியராகவும், தாளாளராகவும் வேலை பார்த்து வருகிறார். இதே பள்ளியில் அவரது மனைவியான ஸ்டெல்லா மேரி என்பவர் ஆசிரியையாகவும், நிர்வாகியாகவும் வேலை பார்த்து வருகிறார். அங்கு இருக்கும் விடுதியில் 14 வயது மாணவி தனது சகோதரியுடன் தங்கி படித்து வருகிறார். இவர்களுக்கு பெற்றோர் இல்லாததால் அத்தையின் பராமரிப்பில் வளர்ந்து வருகின்றனர். இந்நிலையில் 14 வயது சிறுமிக்கு ஜேம்ஸ் பள்ளியில் உள்ள ஆவண காப்பக அறையில் வைத்து பாலியல் தொந்தரவு அளித்துள்ளார்.
இது குறித்து மாணவி ஸ்டெல்லா மேரிடம் தெரிவித்துள்ளார். ஆனால் ஸ்டெல்லா மேரி அந்த மாணவியை அவரது சகோதரியுடன் சேர்த்து பள்ளியிலிருந்து வெளியே அனுப்பியுள்ளார். இதனை அந்த மாணவி தனது அத்தையிடம் தெரிவித்து கதறி அழுதுள்ளார். இதுகுறித்து ஸ்ரீரங்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ஜேம்ஸ் மற்றும் ஸ்டெல்லா மேரியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.