ஆன்லைன் விளையாட்டில் பணத்தை இழந்த 16 வயது சிறுவன் செயின் பறிப்பில் ஈடுப்பட்ட குற்றத்திற்காக காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சென்னையில் உள்ள கொடுங்கையூர் பகுதியை சேர்ந்தவர் ராஜேஸ்வரி. இவர் கடந்த ஜனவரி 19ஆம் தேதி வாசுகி நகர் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர் ராஜேஸ்வரி கழுத்தில் அணிந்திருந்த இரண்டு சவரன் தங்க நகையை பறித்துக்கொண்டு ஓடியுள்ளார். இதைத்தொடர்ந்து ராஜேஸ்வரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அவர் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து சம்பவம் நடந்த இடத்திற்கு அருகில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர்.
அதில் 16 வயது சிறுவன் ராஜேஸ்வரியின் செயினை பறித்து சென்ற காட்சி பதிவாகி இருந்தது . இதனையடுத்து சிறுவனின் புகைப்படத்தை கொண்டு அப்பகுதி முழுவதிலும் காவல்துறையினர் விசாரித்து வந்தனர். பின்னர் சிறுவன் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று நடத்தப்பட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. அந்த விசாரணையில் ,
பதினொன்றாம் வகுப்பு படிக்கும் அந்த சிறுவன் ஆன்லைன் வகுப்புக்காக வாங்கிய செல்போனில் “கலர் டிரேடிங்” என்ற விளையாட்டை பதிவிறக்கம் செய்து தனது தாயாரின் ஏடிஎம் கார்டை பயன்படுத்தி அதில் பணத்தை வைத்து விளையாடி ஐம்பதாயிரம் ரூபாயை இழந்துள்ளார். மேற்கொண்டு விளையாடுவதற்கு பணம் இல்லாததால் வீட்டில் இருந்த நகைகளை தாய்க்கு தெரியாமல் அடகு வைத்து அதை தனது தாயின் வங்கி கணக்கில் செலுத்தி அதிலிருந்து பணத்தை எடுத்து விளையாடியுள்ளார்.
இந்நிலையில் வீட்டில் இருந்த நகைகள் காணாமல் போனதை அறிந்த அவரது தாய் சிறுவனிடம் கேட்டுள்ளார் . அதனால் வேறு வழியில்லாமல் ராஜேஸ்வரியின் கழுத்தில் இருந்து இரண்டு சவரன் நகையை பறித்து அதை கடையில் அடகு வைத்து தாயின் நகையை மீட்க சிறுவன் நினைத்தது தெரிய வந்தது. மேலும் சிறுவன் திருடிய குற்றத்தை ஒப்புக் கொண்டார். இதனை தொடர்ந்து காவல்துறையினர் சிறுவனிடம் மேற்கொண்டு தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.