மனு அளிக்க வந்தவரை மதிக்காமல், நிற்க வைத்தே பேசிய அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரனை கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
மனு அளிக்க வந்த மண்ணின் மக்களை அலட்சியப்படுத்தி அவமதிப்பது தான் சமூக நீதியா ? என்ற தலைப்பில் அறிக்கை வெளியிட்டுள்ள நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஆதி தொல்குடியான குறவர் சமூக மக்களின் உரிமைக்காக ஆறு நாட்களாக பட்டினி போராட்டம் நடத்திய வன வேங்கைகள் கட்சியின் தலைவர் அன்புத்தம்பி இரணியன் அவர்கள் தங்களது கோரிக்கை குறித்தான மனுவை அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் அவர்களிடம் அளிக்க சென்ற போது அவமதிக்கப்பட செய்தியறிந்து அதிர்ச்சியுற்றேன்.
திராவிட மாடல் ஆட்சியா ?
தம்பி இரணியன் உள்ளிட்டவர்களுக்கு அமர இருக்கைகள் கூட அளிக்கப்படாததோடு, அவர்களை நிற்க வைத்தே பேசி அனுப்பி பக்கத்தில் வராதே என கூறி அவமதித்தது பெரும் மன வலியை தருகிறது.இம்மண்ணின் தொல்குடி மக்களை சக மனிதராக கூட மதியாது அலட்சியப்படுத்துவதும், அவமதிப்பது தான் திராவிட மாடல் ஆட்சியா ? இதுதான் பெரியாரும், அண்ணாவும் கற்று தந்த சமத்துவ உணர்ச்சியா ?
வெட்கக்கேடு:
மனு அளிக்க வந்தவர்களின் கோரிக்கையை ஏற்பது, புறந்தள்ளுவது என்பதெல்லாம் கடந்து, வந்தவர்களுக்கு உரிய மானுட மதிப்பை அளித்திட வேண்டாமா ? இந்த ஆண்டை மனப்பான்மையை திராவிட இயக்கம் கற்றுத் தந்ததா ? வெட்கக்கேடு! அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரனின் இத்தகைய அணுகுமுறைக்கு எனது வன்மையான கண்டனங்களை பதிவு செய்கிறேன்.
கோரிக்கைகள்:
குருவிக்காரர்கள் அக்கி பிக்கி, நக்கிலே போன்ற சமூகத்தினரை குறவர்கள் என அடையாளப்படுத்துவது வரலாற்றுதிரிபென எடுத்துக் கூறி, குறவர் சமூகத்தினருக்கு தனி இட ஒதுக்கீடு கோரும் அவர்களது கோரிக்கை என்பது மிக நியாயமானது. அதனை நாம் தமிழர் கட்சி முழுமையாக ஆதரிக்கிறது. ஆகவே வனவேங்கைகள் கட்சியின் தலைவர் தம்பி இரணியன் முன்வைக்கும் கோரிக்கைகளின் பக்கமிருக்கும் தார்மீகத்தை உணர்ந்து, அதனை நிறைவேற்றித் தர முன்வர வேண்டும் என தமிழக அரசே வலியுறுத்துகிறேன் என சீமான் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.