பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி, முதல்வரை மறைமுகமாக விமர்சித்தது, பிரச்சனையை ஏற்படுத்தியுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி, பஞ்சாப் மாநிலத்திற்கு பல திட்டங்களை துவக்கி வைப்பதற்கு சென்றார். அவர் முதலில் ஹெலிகாப்டரில் வருவதாகத் தான் கூறப்பட்டிருந்தது. ஆனால் வானிலை மோசமடைந்ததால் சாலை வழியாக வந்தார். ஹூசைன் வாலா எனும் பகுதியில் இருக்கும் தேசிய தியாகிகளின் நினைவிடத்திற்கு பிரதமர் மோடி முதலில் செல்வார் என்று கூறப்பட்டிருந்தது.
ஆனால், அந்த பகுதிக்குள் பிரதமரின் வாகனம் செல்வதற்கு முன்பாக, அங்கு செல்லக்கூடிய மூன்று சாலைப் பகுதிகளையும் விவசாயிகள் சுற்றிவளைத்தனர். டெல்லியில் ஒரு வருடமாக போராடி உயிர் தியாகம் செய்த விவசாயிகளுக்கு இழப்பீடு அளிக்காமல் இருந்ததற்காக நரேந்திர மோடியின் வாகனத்தை அவர்கள் மறித்தனர்.
எனவே, பாலம் ஒன்றில் பிரதமர் 20 நிமிடங்களாக காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. நேரம் செல்ல செல்ல, பொறுமையிழந்த மோடி, நிகழ்ச்சியை ரத்து செய்து விட்டு டெல்லிக்கு திரும்பிவிட்டார். எனவே, பஞ்சாப் காங்கிரஸ் அரசை, மத்திய அரசு கடுமையாக விமர்சித்தது. பாஜக, நாடு முழுக்க காங்கிரசை எதிர்த்து போராட்டம் நடத்தி வருகிறது.
தற்போது, பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சன்னி, இதற்கு விளக்கம் தெரிவித்திருப்பதாவது, “பிரதமருக்கு எந்த பாதுகாப்பும் குறைபாடும் ஏற்படவில்லை. முதலில் அவர் ஹெலிகாப்டரில் வருவதாக கூறப்பட்டிருந்தது. இறுதியில் அவர் வாகனத்தில் வந்து விட்டார். பாஜகவின் கூட்டத்திற்கு 7000 மக்கள் வருவார்கள் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.
ஆனால், 700 மக்கள் தான் வந்தார்கள். இப்போது, அதனை மறைக்க வேறு காரணங்களை கூறிக் கொண்டிருக்கிறார்கள். போராட்டம் நடத்தியவர்களிடம், நினைத்திருந்தால் மோடி பேசியிருக்கலாம். நானும் நம் பிரதமருக்கு மதிப்பு கொடுக்கிறேன். அவர், ஆரோக்கியமாகவும் மகிழ்வுடனும் இருக்க வேண்டும் என்று எண்ணுகிறேன். போராடுவது மக்களுக்கான உரிமை. அதை நாம் குறை கூற முடியாது” என்று கூறிவிட்டார். எனினும், அவரை பாஜகவினர் தொடர்ந்து விமர்சித்து கொண்டிருக்கிறார்கள்.
தற்போது, சன்னி தன் ட்விட்டர் பகுதியில், “வல்லபாய் படேலின் வார்த்தைகளை குறிப்பிட்டு, பிரதமரை மறைமுகமாக விமர்சித்திருக்கிறார். அதில், “ஒருவர் தன் அரசியல் பணியை விட, தன் உயிர் முக்கியம் என்று நினைத்தால், அவர் இந்தியா போன்ற நாட்டில் உயர்ந்த பொறுப்பில் இருக்கக் கூடாது” என்று பதிவிட்டிருக்கிறார். இதனை எதிர்த்து, பாஜக கட்சியினர் அவரை மிகக் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.