திருச்செங்கோட்டில் திருமணமான 7 மாதத்தில் கர்ப்பிணி பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு கரட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி சங்கரபாண்டியன் என்பவருக்கும், மும்பையை சேர்ந்த நளினி பிரான்சிஸ் என்ற 26 வயது பெண்ணுக்கும் கடந்த 7 மாதங்களுக்கு முன்னதாக திருமணம் நடந்து முடிந்தது. இதையடுத்து கணவன்-மனைவி இருவரும் கரட்டுப்பாளையத்திலுள்ள ஒரு வீட்டில் வாழ்ந்து வந்தனர்.
இந்தநிலையில் நளினி 6 மாத கர்ப்பிணியாக இருந்ததால் சிறப்பாக வளைகாப்பு நடத்த ஒரு நல்ல நாள் பார்த்து, அதற்கான ஏற்பாடுகளை செய்வதற்கு அவரின் தாயார் லதா பிரான்சிஸ் தமிழகம் வந்தார். பின்னர் அவர் பெரம்பலூரிலுள்ள தன்னுடைய மூத்த மகள் வீட்டில் தங்கி இருந்தார். இந்நிலையில் நளினி கரட்டுப்பாளையம் வீட்டில் துப்பட்டாவால் தூக்குமாட்டிக் கொண்டு தற்கொலை செய்தார்.. அதனைத்தொடர்ந்து அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் சேர்த்து அங்கு மருத்துவர் பரிசோதனை செய்து பார்த்தபோது அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தார்.
இச்சம்பவம் குறித்து கர்ப்பிணியின் தாய் தன்னுடைய மகள் சாவில் சந்தேகம் இருப்பதாகவும், அதற்கு உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திருச்செங்கோடு நகர காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருமணமாகி 7 மாதங்களே ஆவதால் இதுகுறித்து திருச்செங்கோடு உதவி ஆட்சியர் மணிராஜூம் விசாரணை மேற்கொண்டு வருகின்றார்.