காஞ்சி அருகே தனது திருமணத்திற்காக பெற்றோர்கள் படும் கஷ்டத்தை தாங்க முடியாமல் மகள் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை பகுதியை அடுத்த பழைய நல்லூர் பகுதியில் வசித்து வருபவர் சம்பத். இவர் தனியார் கம்பெனி ஒன்றில் காவலாளியாக பணிபுரிந்து வருகிறார். இவருடைய ஒரே மகள் ரேவதி. மகளுக்கு 21 வயதாகும் நிலையில், சீக்கிரம் திருமணம் செய்து கொடுக்க வேண்டும். நகை விலை வேறு ஏறிக்கொண்டே செல்கிறது. எனவே திருமணத்துக்கு நகைகளை கஷ்டப்பட்டு சேர்க்க வேண்டியுள்ளது. சிறுக சிறுக நகைகளை சேர்த்து, வருகின்ற ஜனவரி மாதத்திற்கு முன்பாகவே மகளை திருமணம் செய்து கொடுத்து விட வேண்டும் என்று பெரியவர்கள் வீட்டில் பேசியுள்ளனர்.
இதை காதில் கேட்ட ரேவதி தனது பெற்றோர்கள் திருமணத்திற்காக இவ்வளவு கஷ்டப்பட வேண்டுமா என்று உறவினர்களிடமும் பக்கத்து வீட்டார்களிடமும் கூறி வருத்தப்பட்டுள்ளார். அவர்களது பெற்றோருக்கு இது தெரிய வர, நல்லது நடக்க வேண்டுமென்றால் கஷ்டங்களை சமாளித்து தான் ஆக வேண்டும் என்று கூறியுள்ளார்கள். இந்நிலையில் நான் திருவேற்காட்டில் உள்ள உறவினர்கள் வீட்டிற்கு சென்று வருகிறோம் எனக் கூறி ரேவதியின் பெற்றோர்கள் செல்ல, பின் திரும்பி வந்த அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
வீட்டு கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு நீண்ட நேரமாக கதவு திறக்கப்படாததால் உடைத்துக்கொண்டு உள்ளே சென்று பார்த்தபோது அவர் தூக்கில் உயிரற்று தொங்கியதை கண்டு பெற்றோர்கள் கதறி அழுதனர். இதுகுறித்து காவல் நிலைத்தில் தகவல் தெரிவிக்கப்பட சம்பவ இடத்திற்கு விரைந்து அவர்கள் பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பியதுடன் தற்கொலை குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்