ஸ்காட்லாந்தில் நடைபெற்ற ஏலம் ஒன்றில் டெக்செல் வகை ஆடு ஒன்றின் விலை இந்திய மதிப்பில் ரூ. 3.5 கோடிக்கு ஏலம் போய் உலக சாதனை படைத்துள்ளது.
ஸ்காட்லாந்து நாட்டில் உள்ள கிளாஸ்கோ, லானார்க் என்ற இடத்தில் ஒவ்வொரு அண்டும் ஆடுகள் ஏலம் விடும் விழா நடைபெறுவது வழக்கமாக உள்ள ஒன்று. இந்த ஏலம் விடும் விழாவில் இங்கிலாந்தின் மான்செஸ்டரைச் சேர்ந்த சார்லி போடன் என்பவரால் வளர்க்கப்பட்ட ஆட்டுக்குட்டி ஒன்று இந்த ஆண்டு ஏலத்துக்கு கொண்டுவரப்பட்டது. நெதர்லாந்து அருகே இருக்கும் சிறிய தீவைச் சேர்ந்த டெக்சல் இனத்தைச் சேர்ந்த இந்த ஆட்டுக்குட்டியின் பெயர் டபிள் டைமண்ட் என்றும் இதன் வயது 6 என்றும் ஆட்டை வளர்த்தவர் தெரிவித்துள்ளார்.
போட்டா போட்டிக்கு காரணம்:
டபுள் டைமண்ட் ஆட்டின் அடிப்படை விலை 10 ஆயிரம் பவுண்டுதான் இருந்தது. இந்த ஆட்டுக்குட்டியை ஏலம் எடுக்க சந்தையில் மக்கள் போட்டி போட்டனர். இதனால், ஆட்டின் விலை ராக்கெட் வேகத்தில் எகிறி, இறுதியில் அந்த ஆட்டு குட்டி 3,67,000 பவுண்டுக்கு ஏலம் போனது. இதன் இந்திய மதிப்பில் பார்த்தால் 3.5 கோடி ரூபாய் ஆகும். நெதர்லாந்து அருகேயுள்ள சிறிய தீவைச் சேர்ந்த டெக்சல் வகை செம்மறி ஆடுகள், ஸ்காட்லாந்து நாட்டின் அதிகளவு குளிரைத் தாங்கும் உடலமைப்புக் கொண்டவை.
மேலும் இனவிருத்திக்கு மிக வித்தாக இருப்பதால் இந்த ரக ஆட்டுக்கிடாவை அதிக தொகை கொடுத்து மக்கள் வாங்கி செல்வதாக பிரிட்டிஷ் டெக்சல் ஆடுகள் வளர்ப்பு மையம் தெரிவித்துள்ளது. இந்த ஆட்டுக்குட்டியை வளர்த்தவர் சார்லி போடன் ‘டபுள் டைமண்ட்’ என்று பெயர் வைத்த காரணத்தால் தான் என்னமோ? வைரத்தை போலவே விலை கொண்டதாக மாறியுள்ளது இந்த செம்மறி ஆட்டுக்குட்டி.