மகா சிவராத்திரி அன்று ருத்திரனான சிவபெருமானை அக்னி ராசியான மேஷம், சிம்மம், தனுசு ராசிக்காரர்கள் எப்படி வழிபட வேண்டும் எந்த முறையில் விரதம் இருக்க வேண்டும் என்பதை பற்றிய தொகுப்பு.
அம்பிகையின் அருளைப் பெற நவராத்திரி இருப்பதைப் போல சிவபெருமானின் பரிபூரண அருளைப் பெற இந்த மகா சிவராத்திரி இருக்கின்றது. சிவபெருமானுக்குரிய விரதங்களில் மிகச் சிறந்தது இந்த மகா சிவராத்திரி விரதம். சிவராத்திரி அன்று விரதம் இருந்து நான்கு சாமங்கள் சிவபெருமானை வழிபட்டால் தெரிந்தோ தெரியாமலோ செய்த சகல பாவங்களும் நம்மை விட்டு அகன்று விடும் என்பது ஐதீகம். இந்த நான்கு ஜாமம் என்பது மாலை 6 முதல் இரவு 9 வரை முதல் ஜாமம், இரவு 9 மணி முதல் 12 மணி வரை இரண்டாவது சாமம், இரவு 12 முதல் விடியற்காலை மூன்று மணிவரை மூன்றாவது சாமம், விடியற்காலை 3 மணி முதல் 6 மணி வரை நான்காவது சாமம் எனப் பிரித்துள்ளனர்.
இந்த நான்கு சாமங்களும் கண்விழித்து சிவபூஜை செய்து, சிவநாமம் ஜெபித்து, சிவன் பாடல்களை பாடி, சிவனை போற்றி வழிபடுவது உத்தமமான செயலாகும். அதிலும் அக்னி ராசியான மேஷம் சிம்மம் தனுசு ராசிக்காரர்கள் உபவாசமிருந்து இந்த நான்கு ஜாம பூஜையை செய்தீர்கள் என்றால் மிகப்பெரிய வரம் கிடைத்தது போல் ஆகும். சிவராத்திரி அன்று அதிகாலையிலேயே விழித்துக்கொண்டு குளித்துவிட்டு வீட்டின் பூஜை அறையில் தீபாராதனை காண்பித்து வழிபடவேண்டும். சிவன் கோவிலுக்கு சென்று சிவனுக்கு உகந்த வில்வ இலை கொண்டு அர்ச்சனை செய்ய வேண்டும்.
சிவராத்திரி அன்று இரவு முழுதும் தூங்காமல் சிவநாமம் ஜெபித்து மறுநாள் காலை குளித்து சிவனை வழிபட்டு பசு மாட்டிற்க்கு அகத்திக்கீரை போன்றவற்றை தானமாக கொடுக்க வேண்டும். அல்லது ஏழை எளிய மக்களுக்கு தங்களால் முடிந்த அளவு தானம் செய்யலாம். உடல்நலக்குறைவின் காரணமாக இரவு முழுதும் முழுவதும் விழித்திருக்க முடியாத காரணம் இருந்தால் சிவராத்திரி அன்று இரவு 11 36 முதல் பின் இரவு மணி 1.05 வரையிலும் உள்ள ஒன்றரை மணி நேரமே இறைவன் ஜோதி லிங்கமாக தோன்றிய லிங்கோத்போகாலம் என்பர். அந்த ஒன்றரை மணி நேரமாவது சிவ பாடல் பாடுவது, சிவஸ்தோத்திரம் செல்வது போன்றவைகளை செய்யலாம் அதன்பிறகு தூங்குவதால் எந்த பிரச்சனையும் இல்லை. சிவபூஜை செய்த சிவராத்திரி நற்பலன்களை அந்த ஒன்றரை மணி நேரத்திற்குள்ளாகவே பெற்றுக்கொள்ளலாம். கூடுமானவரை இரவு முழுவதும் கண்விழித்து சிவபூஜை மேற்கொள்வதே சிறப்பு.