ராமர் கோவில் கட்டுவதற்கு சிவசேனா சார்பாக ஒரு கோடி ரூபாய் கொடுத்தும் கொடுக்கவில்லை என கூறுவது வியப்பை ஏற்படுத்துவதாக சிவசேனா மூத்த தலைவர் தெரிவித்துள்ளார்.
மராட்டிய மாநிலத்தின் முதல் மந்திரியான உத்தவ் தாக்கரே மார்ச் மாதம் அயோத்தியில் ஆரத்தி வழிபாடு செய்தார். அச்சமயம் சிவசேனா சார்பாக ராமர் கோவில் கட்டுவதற்கு ரூபாய் ஒரு கோடி வழங்கப்படும் என தெரிவித்திருந்தார். நாளை அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான பூமி பூஜை நடைபெறுகின்றது. இதில் பிரதமர் மோடி பங்கேற்று அடிக்கல் நாட்டுகிறார்.
இந்நிலையில் ஸ்ரீ ராம ஜென்ம பூமி தீர்த்த ஷேத்ர அறக்கட்டளை தலைவர் கூறுகையில், “சிவசேனா கூறியபடி ராமர் கோவில் கட்டுவதற்கு ஒரு கோடி ரூபாய் வழங்கவில்லை” என தெரிவித்துள்ளார். அவரது கூற்றுக்கு சிவசேனா மறுப்பு தெரிவித்து, அக்கட்சியின் மூத்த தலைவர் அனில் தேசாய் கூறியதாவது, “சிவசேனா ரூபாய் ஒரு கோடியை ராமர் கோவில் கட்டுவதற்கு தான் அளித்த வாக்குறுதிப்படி கொடுத்துவிட்டது.
முதலமைச்சர் உத்தவ் தாக்கரேயின் பிறந்த நாளை முன்னிட்டு கடந்த மாதம் 27 ஆம் தேதி அறக்கட்டளையின் வங்கிக் கணக்கிற்கு பணம் செலுத்தப்பட்டது. பணத்தை பெற்றதற்கான அத்தாட்சி சான்றை அறக்கட்டளையின் பொருளாளர் அனுப்பியுள்ளார். ஆனால் தற்போது அறக்கட்டளையின் தலைவர் இவ்வாறு கூறியிருப்பது வியப்பை ஏற்படுத்தியுள்ளது” என தெரிவித்துள்ளார்.