Categories
தேசிய செய்திகள்

இறுதி சடங்கில் 20 பேர்… மதுபானக்கடையில் 1000 பேர்.. மத்திய அரசு மீது சிவசேனா பாய்ச்சல்…!

மதுபான கடைகளில் ஆயிரம் பேர் கூடுவதற்கு அனுமதி அளித்த மத்திய அரசை சிவசேனா மாநிலங்களவை எம்பி விமர்சித்துள்ளார்

கொரோனா தொற்று பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதை தொடர்ந்து 40 நாட்கள் மூடி இருந்த மதுபான கடைகள் சில கட்டுப்பாடுகளுடன் திறக்கப்பட்டன. மராட்டியம், ஆந்திரா, டெல்லி, கர்நாடகா உட்பட பல மாநிலங்களில் மதுக்கடைகள் திறக்கப்பட்டு விற்பனையும் அதிக வசூலை பெற்று வருகின்றது. காலை முதலே குடிமகன்கள் வரிசையில் காத்திருந்து மதுபானங்களை வாங்கி செல்கின்றனர்.

ஆனால் பல இடங்களில் கட்டுப்பாடுகளை மீறி சமூக இடைவெளியை பின்பற்றாமல் அடித்து பிடித்துக்கொண்டு மதுபானங்களை வாங்குகின்றனர். இதனால் தொற்று எளிதில் பரவுவதற்கான வாய்ப்பு இருப்பதாக பல்வேறு தரப்பிலிருந்து கருத்துக்கள் வந்தவண்ணம் உள்ளன. அதோடு இத்தனை நாட்கள் கொரோனா பற்றிப் பேசி வந்த மக்கள் கடந்த இரண்டு தினங்களாக மதுபானக் கடையில் குவியும் கூட்டம் குறித்து பேசி வருகின்றனர். இது குறித்து சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து ஆன்லைனில் மது விற்பனை நடத்துவதற்கு மாநில அரசுக்கு சுப்ரீம் கோர்ட் பரிசீலிக்க அறிவுரை வழங்கியது.

இந்நிலையில் சிவசேனா மதுபான கடையில் கூடும் கூட்டம் குறித்து மத்திய அரசை குற்றம் சுமத்தியுள்ளது. சிவசேனா மாநிலங்களவை எம்பி சஞ்சய் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருப்பதாவது, “இறுதி சடங்கில் 20 பேர் மட்டுமே கூட அனுமதி அளித்தனர் காரணம் அங்கு ஏற்கனவே ஆன்மா உடலை விட்டு வெளியேறிவிட்டது. மதுபானக் கடை அருகில் 1000 பேர் கூடுவதற்கு அனுமதி அளித்துள்ளனர். காரணம் அங்குதான் அதிகமான ஆன்மாக்கள் இருக்கின்றது” என குறிப்பிட்டுள்ளார்.

Categories

Tech |