கோவையில் சூறாவளி காற்றுடன் பெய்த மழையில் பல்வேறு இடங்களில் மின்கம்பங்கள் வளைந்து மின் விநியோகம் தடைபட்டுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக கோடை மழை பெய்து வருகிறது. பகலில் வெயில் கொளுத்தினாலும் மாலை நேரங்களில் மழை பெய்து குளிர்ச்சியை ஏற்படுத்தி வந்தது. அந்த வகையில், நேற்று மாலை மழையை விட சூறாவளி காற்றின் தாக்கம் அதிகமாக இருந்தது.
இதனால் மழை சாரலின் வீரியம் குறைவாகவே இருந்தது. அதிகப்படியாக வீசிய சூறாவளிக் காற்றினால் ஆங்காங்கே மரகிளைகள் உடைந்து விழுந்தன. சில இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்து மின்கம்பங்களில் விழுந்து, மின்கம்பிகள் அறுபட்டு மின்தடை ஏற்பட்டது. அதேபோல் கரியம்பாளையம் பகுதியில் துணை மின் நிலையம் அருகில் உள்ள மூன்று மின் கம்பங்கள் காற்றின் வேகத்தைத் தாக்குப் பிடிக்க முடியாமல் வளைந்தன.
இதேபோன்று பல்வேறு இடங்களில் மின்கம்பங்கள் வளைந்ததால் மின்தடை என்பது கோயம்புத்தூர் மாவட்டத்தின் பல பகுதிகளில் ஏற்பட்டது. பின் இதுகுறித்து மின் வாரியத்தின் தலைமை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட அவர்கள் அதனை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
நேற்று மாலை நான்கு மணிக்கு தடைபட்ட மின்வினியோகம் இந்த கணம் வரை பல பகுதிகளில் தொடர்ந்து நீடித்து வருவதால் அப்பகுதி மக்கள் அவதி அடைந்துள்ளனர். நல்லவேளையாக இதில் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.