ரஷ்யா-உக்ரைன் போர் இரண்டு வாரங்கள் கடந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு தான் இரண்டு நாட்டு பேச்சுவார்த்தையின் காரணமாக தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இரண்டு நாடுகளிலும் போரின் காரணமாக உயிரிழப்புகள் அதிகளவில் ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டாலும் இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எதுவும் வெளியிடப்படவில்லை. போர் காரணமாக சர்வதேச அளவில் வணிக ரீதியாக பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.
குறிப்பாக எரிபொருள் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. ஏற்கனவே உலக நாடுகள் பொருளாதாரத்தில் சிக்கி தவித்து வரும் நிலையில் தற்போது விலைவாசி புதிய உச்சத்தை தொட்டது. இந்நிலையில் உக்ரைன் ரஷ்யா போர்ச்சூழல் காரணமாக தங்கம் விலை இந்த ஆண்டு இறுதிக்குள் 25 சதவீதம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கோல்ட்மேன் சாக்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதன்படி தற்போது சர்வதேச சந்தையில் 2,050 டாலராக இருக்கும் தங்கத்தின் விலை இந்த ஆண்டு இறுதிக்குள் 25 சதவீதம் உயர்ந்து 2 ஆயிரத்து 500 டாலராக இருக்கும். அமெரிக்க வளர்ச்சி தேக்கம் உள்ளிட்ட காரணங்களால் தங்கம் விலை உயரும் என இந்நிறுவனம் ஏற்கனவே கணித்திருந்தது குறிப்பிடத்தக்கது.