உத்திரபிரதேச மாநிலத்தில் ஹேமா சவுத்ரி (27) என்ற இளம் பெண் வசித்து வந்துள்ளார். இந்தப் பெண் ஒரு வணிக வளாகத்தில் வேலை பார்த்து வந்த நிலையில், கடந்த மாதம் 19-ம் தேதி திடீரென காணாமல் போயுள்ளார். இது குறித்து குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்ததில் ஹேமா அஜய் தாகூர் (27) என்ற வாலிபருடன் கடைசியாக பைக்கில் சென்றது தெரிய வந்தது. இவரை காவல்துறையினர் பிடித்து விசாரித்ததில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்துள்ளது. அதாவது அஜய் தாகூரின் காதலி பயல் (22). இவருடைய பெற்றோர் கடன் தொல்லை தாங்க முடியாததால் கடந்த மே மாதம் தற்கொலை செய்து கொண்டனர்.
அதாவது உறவினரான சுனில் என்பவரிடம் பயலின் பெற்றோர் 5 லட்ச ரூபாய் கடன் வாங்கிய நிலையில், அந்த கடனை திரும்பத் தர வலியுறுத்தி பயலின் 2 சகோதரர்கள் மற்றும் அண்ணி ஆகியோர் தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளனர். இதனால் பயலின் பெற்றோர் தற்கொலை செய்து கொண்ட நிலையில் பயலுக்கும் தொடர்ந்து அவர்கள் தொல்லை கொடுத்து வந்துள்ளனர். இந்நிலையில் தன்னுடைய பெற்றோரின் மரணத்திற்கு காரணமான 4 பேரையும் பயல் தன்னுடைய காதலன் அஜயுடன் இணைந்து தீர்த்து கட்டுவதற்கு முடிவு செய்துள்ளார். அந்த சமயத்தில் அவர்கள் வணிக வளாகத்திற்கு சென்ற போது ஹேமாவை பார்த்துள்ளனர்.
அப்போது ஹேமா பார்ப்பதற்கு பயல் போன்று இருந்ததால், ஹேமாவை கொலை செய்ய 2 பேரும் திட்டமிட்டுள்ளனர். அதாவது ஹேமாவை கொலை செய்துவிட்டு தற்கொலை என்பது போல் நாடகமாடி பயல் தான் இறந்துவிட்டார் என்று உறவினர்களை நம்ப வைத்துவிட்டு அதன் பின் உறவினர்களை தீர்த்து கட்ட வேண்டும் என பயல் மற்றும் அவருடைய காதலர் முடிவு செய்துள்ளார். இதன் காரணமாக ஹேமாவுடன் அஜய் நெருங்கி பழகி அவரை பைக்கில் பயல் வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளார். அதன் பிறகு ஹோமாவை பயல் மற்றும் அஜய் இணைந்து கழுத்தறுத்து கொலை செய்துள்ளனர். இதனையடுத்து ஹேமாவின் முகத்தில் சூடான வெந்நீரை ஊற்றி முகத்தை முழுவதுமாக சிதைத்துள்ளனர்.
அதோடு முகத்தின் அழகு பாதிக்கப்பட்டதாகவும் தன்னை அனைவரும் வெறுப்பதாலும் தான் தற்கொலை செய்து கொள்வதாக பயல் கடிதம் எழுதி ஹேமாவின் கையில் வைத்துவிட்டு தன்னுடைய காதலனுடன் தப்பியுள்ளார். இந்நிலையில் வீட்டில் ஹேமாவின் சடலத்தை பார்த்த உறவினர்கள் பயல்தான் இறந்து விட்டதாக கருதி அடக்கம் செய்துள்ளனர். மேலும் இந்த தகவல்கள் அனைத்தும் விசாரணையில் தெரிய வரவே பயல் மற்றும் அஜயை காவல்துறையினர் கைது செய்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.