ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று பயணிகளுடன் சுமார் 30,000 அடி உயரத்தில் பறந்துகொண்டிருந்தது. அப்போது விமானத்தில் பயணித்த 29 வயதுடைய லி என்ற பெண் திடீரென அவர் அமர்ந்திருந்த பகுதியில் உள்ள கண்ணாடி ஜன்னலை வேகமாக உடைத்துள்ளார். அதனை கண்ட சக பயணிகள் அலறியுள்ளனர், அதிர்ச்சியடைந்த விமான பணியாளர்கள், உடனடியாக விமான கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தனர்.
இதனைத்தொடர்ந்து, உடனடியாக மத்திய சீனாவின் ஹெனான் தலைநகரில் உள்ள ஜெங்ஜோ சின்ஜெங் விமான நிலையத்தில் விமானம் தரையிறக்கப்பட்டது. பின்னர் அந்த பெண்ணிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இந்த சம்பவம் குறித்து விமான பாதுகாப்பு அதிகாரி கூறுகையில், ‘அந்த பெண் விமானத்தில் ஏறுவதற்கு முன்பே அதிக அளவில் மது குடித்திருந்ததால் போதையில் தனது கட்டுப்பாட்டை இழந்து ஜன்னல் கண்ணாடியை உடைத்துவிட்டார்.
மேலும், அந்த பெண் ஒருவரை காதலித்து வந்ததாகவும், தனது காதலை காதலனிடம் கூறியபோது, அதை புரிந்து கொள்ளாமல் புறக்கணித்துள்ளார். இதனால் மனமுடைந்து அந்த பெண்(லி) போதையில் விமானத்தின் ஜன்னல் கண்ணாடியை உடைத்துள்ளார்.
லி குடித்த மதுபானத்தில் ஆல்கஹாலின் அளவு 35 முதல் 60 சதவீதம் வரை இருந்துள்ளது. அதிர்ஷ்டவசமாக, இந்த சம்பவத்தால், யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. இருப்பினும் தனிப்பட்ட விருப்பு வெறுப்பிற்காக இதுமாதிரியான செயல்களை செய்வது அனுமதிக்க முடியாது என கூறினார். தற்போது அந்த பெண்ணை கைது செய்து காவலில் வைத்து விசாரணை நடத்தி வருவதாக தெரிவித்தார்.