தமிழகத்தில் கொரோனா தொற்று இல்லை என்கிற நிலை வராது என மருத்துவ குழுவினர் தகவல் அளித்துள்ளனர்.
சென்னை தலைமை செயலகத்தில் 4வது முறையாக மருத்துவ நிபுணர் குழுவுடன் எடப்பாடி பழனிசாமி இன்று காலை ஆலோசனை நடத்தினார். முதல்வருடனான ஆலோசனைக்கு பிறகு ஐ.சி.எம்.ஆர். துணை இயக்குனர் பிரதீப் கவுர் பேட்டியளித்தார். அப்போது ஒரே நேரத்தில் ஊரடங்கை தளர்த்தினால் கொரோனா தொற்று அதிகரிக்கும், படிப்படியாக தான் ஊரடங்கு தளர்வுகள் அளிக்கப்பட வேண்டும் என முதல்வருக்கு பரிந்துரை செய்துள்ளோம் என கூறியுள்ளார்.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது குறித்து கவலைப்பட வேண்டாம், அதிகளவில் பரிசோதனை செய்வதால்தான் அதிக பாதிப்புகளை கண்டறிய முடிகிறது. மாநிலத்தில் கொரோனா பரிசோதனையை குறைக்க கூடாது. பரிசோதனை செய்தால் தான் நோய் தொற்றின் அளவு குறித்து அறிய முடியும் என்றும் விரைவாக தொற்று கண்டறியப்பட்டால் பலி எண்ணிக்கையை குறைக்கலாம் என்றும் தெரிவித்துள்ளனர்.
மேலும் தமிழகத்தில் கொரோனா தொற்று இல்லை என்கிற நிலை வராது என்ற அதிர்சி தகவல் அளித்துள்ளனர் தமிழகத்தில் தொற்று பாதிப்பு ஏற்றம், இறக்கம் இருக்கும். பதற்றமடையாமல் கொரோனோவை கட்டுப்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும். கொரோனா பரவலை தடுப்பதில் மக்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம். தனிநபர் இடைவெளியை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என பிரதீப் கவுர் கூறியுள்ளார். மேலும் கொரோனா தொற்றுக்கு காரணமானவர்களை கண்டறிவது தமிழகத்தில் சிறப்பாக உள்ளது என மருத்துவ குழுவினர் பாராட்டு தெரிவித்துள்ளனர்.