நாடு முழுவதும் லட்சக்கணக்கான மத்திய அரசு ஊழியர்கள் அகவிலைப்படி நிலுவைத்தொகைக்காக காத்திருக்கும் நிலையில், அகவிலைப்படி நிலுவைத் தொகையை அரசு வழங்காது என்ற பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவல் மத்திய அரசு ஊழியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா தொடங்கியபோது செலவுகளைச் சமாளிப்பதற்காக அகவிலைப்படி உயர்வு வழங்குவதை மத்திய அரசு நிறுத்தியது.
அதன்பிறகு 2021 ஆம் ஆண்டு ஜூலை மாதம் மீண்டும் அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் பணவீக்கத்தை சமாளிப்பதற்காக ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வை அரசு வழங்குகிறது. அதன்படி மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒவ்வொரு வருடமும் ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் அகவிலைப்படி உயர்வு வழங்கப்படுகிறது. 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் 2021 ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரை 18 மாதங்களாக நிலுவையில் உள்ள அகவிலைப்படி தொகையை அரசு எப்போது வழங்கும் என்று ஊழியர்கள் அனைவரும் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.
அதனால் அரசு ஊழியர்களுக்கு அதிக பணம் கிடைக்கும். இந்த நிலையில் பென்ஷன் விதிமுறைகள் திருத்தத்திற்கான நிலைக்குழுவின் 32வது கூட்டம் சமீபத்தில் நடந்தது. அதில் மத்திய பென்ஷனர் நலத்துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் பேசினார். அப்போது, 18 மாதங்களுக்கான அகவிலைப்படி நிலுவைத் தொகை வழங்கப்படாது என தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அதனால் மத்திய அரசு ஊழியர்கள் அனைவரும் மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளனர். மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை 34 சதவீதமாக உயர்த்துவதற்கு கடந்த மார்ச் மாதம் மத்திய கேபினேட் ஒப்புதல் வழங்கியது. அதற்கு முன்பு அகவிலைப்படி 31 சதவீதமாக இருந்தது.