நாடு முழுவதும் ரேஷன் கடைகள் மூலமாக மக்களுக்கு குறைந்த விலையிலும் இலவசமாகவும் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இதில் லட்சக்கணக்கான ஏழை எளிய மக்கள் பயனடைந்து வருகின்றனர். இந்நிலையில் வசதி படைத்தவர்கள் மற்றும் தகுதியற்ற ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் பலரும் முறைகேடாக பொருள்களைப் பெற்று வருவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்துள்ளது. இதையடுத்து ரேஷன் கார்டு விதிகளில் மாற்றம் செய்ய உணவு மற்றும் பொது வினியோகத் துறை தற்போது முடிவு செய்துள்ளது. அதன்படி ரேஷன் கடைகளில் தகுதி உடைய ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் பொருட்களின் அளவு மாறக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்காக புதிய அளவு பட்டியல் கிட்டத்தட்ட தயாராகிவிட்டது. இதுகுறித்து மாநில அரசுகளுடன் மத்திய உணவு மற்றும் பொது வினியோகத் துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தி உள்ளனர். நாடு முழுவதும் போலியான முறையில் ரேஷன் அட்டையை பயன்படுத்தி பலரும் பயன் அடைகின்றனர். நாட்டில் 80 கோடி மக்கள் தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தை பயன்படுத்தி வருகின்றனர். அவர்களில் பொருளாதார ரீதியாக வசதி படைத்தவர்கள் பலரும் இருக்கின்றனர். இதனால் அரசு ரேஷன் கார்டு விதிகளை தற்போது மாற்றப் போகிறது.
நாட்டில் பெரும்பாலான மாநிலங்களில் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வரும் கோடிக்கணக்கான பயனாளிகள் இந்த திட்டத்தை பயன்படுத்தி வருகிறார்கள். இதனிடையே தகுதியற்ற மற்றும் போலியான ரேஷன் கார்டுகளை ரத்து செய்வதற்கு அரசு இத்தகைய முடிவை எடுத்துள்ளது. எனவே இனி தகுதியற்ற ரேஷன் அட்டைதாரர்கள் ரேஷன் பொருட்களை வாங்கவே முடியாது.