தமிழகம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகளில் 4,219 பயோ-மெட்ரிக் இயந்திரங்களானது பழுதடைந்து இருப்பதால், ரேஷன் கடை ஊழியர்களிடம் இதற்காக ரூபாய் 8.68 கோடி வசூலிக்க உணவு பொருள் வழங்கல் துணை ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார். இது தொடர்பாக உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை ஆணையாளர் ராஜாராமன் அனைத்து மாவட்டங்களிலுள்ள வழங்கல் அலுவலர்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், பொது விநியோக திட்டத்தில் முழு கணினிமயமாக்கலின் ஒரு பகுதியாக தமிழகத்தில் செயல்படும் 34,773 ரேஷன்கடைகளுக்கு இணையதள இணைப்புடன் கூடிய விற்பனை முனைய இயந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன.
இதனிடையில் ரேஷன் கடைகளில் பொருத்தப்பட்ட விற்பனை முனைய இயந்திரங்களில் ஏப்ரல் 2015-2020 வரையிலான ஆண்டுகளில் 4,219 விற்பனை முனைய இயந்திரங்கள் ரேஷன் கடை ஊழியர்களால் முறையற்ற கையாளுதல் மூலமாக சேதமடைந்துள்ளது. இது குறித்து கூட்டுறவு சங்கங்களின் சார் பதிவாளர், தமிழ்நாடு வாணிப கழகத்தின் பகுதி அலுவலர்கள் போன்றோருடன் இத்துறையின் இணை ஆணையாளர் தலைமையில் சேதமடைந்த விற்பனை முனைய இயந்திரங்களுக்கான ஆவணங்கள் மதிப்பீடு செய்யப்பட்டு, அபராத தொகை இறுதி செய்யப்பட்டது.
அந்த வகையில் அரசுக்கு முன்மொழிவுகள் அனுப்பப்பட்டதில், சேதமடைந்த விற்பனை முனைய இயந்திரங்களுக்கு உண்டான அபராதம் தொகையாக ரூபாய் 8 கோடி 68 லட்சத்து 55 ஆயிரத்து 742 ரேஷன் கடை ஊழியர்களிடமிருந்து வசூல் செய்ய வேண்டும். அதன்படி ஏப்ரல் 2015- 2020 வரையிலான காலத்தில் சேதமடைந்த 4,219 விற்பனை முனைய இயந்திரங்களுக்கு உண்டான அபராதம் தொகையாக ரூபாய் 8,68,55,742-ஐ ரேஷன் கடை ஊழியர்களிடம் இருந்து வசூல் செய்து வழங்க மாவட்ட இணை பதிவாளர், மண்டல மேலாளர் அறிவுரை வழங்க வேண்டும்.
அதனை தொடர்ந்து கடைவாரியாக கவனக்குறைவு மற்றும் தன்னிச்சையான காரணங்களால் சேதமடைந்த விற்பனை முனையங்கள் விபரம் துணை ஆணையாளர் வடக்கு, தெற்கு மாவட்ட வழங்கல் அலுவலர் அலுவலகங்களின் கடை பணியாளர்களின் ஒப்புதல் ஆவணத்துடன் வைக்கப்பட்டுள்ளது” என்று அதில் கூறப்பட்டுள்ளது. இந்த உத்தரவானது ரேஷன் கடை ஊழியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு டி.யு.சி.எஸ் தொமுச பொதுச்செயலாளர் ராஜன் சுவாமிநாதன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறொயபோது, “இயந்திரத்தின் சேதமதிப்பு 2 மடங்காக அதிகரித்து காட்டப்பட்டுள்ளது. இதற்கு காப்பீடு செய்து இருந்தால், அதற்கான இழப்பீட்டை பெற்றிருக்க முடியும். எல்லா கடைகளிலும் எலி தொல்லை அதிகளவில் இருப்பதால் இரவு நேரங்களில் மிஷினுக்கும் பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை உள்ளது. இதில் விளிம்பு நிலையிலுள்ள ரேஷன் கடை பணியாளர்களை மனிதாபிமானத்துடன் நடத்தி மிஷினுக்கான இழப்பீடு தொகையை காப்பீடு திட்டத்தின் மூலமாக பெற துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அனைத்து தொழிலாளர்கள் சார்பாக கேட்டுக் கொள்கிறேன்” என கூறினார்.