நீட் தேர்வுக்கான ஆக்கப்பூர்வமான முடிவுகள் வெளிவருவதற்கு முன்பே,மாணவர்களின் உத்தேச மதிப்பெண்களை நீட் பயிற்சி மையங்கள் விளம்பரமாக வெளியிட்டுள்ளதற்கு கல்வியாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். நீட் தேர்வு நடைபெற்று முடிந்து இன்றுடன் இரண்டு வாரம் நிறைவு பெற இருக்கிறது. இன்னும் தேர்வு முடிவுகள் வெளியிடப்படவில்லை. ஆனால் தங்களது நீட் தேர்வு மையங்களில் பயின்ற மாணாக்கர்களின் பெயிட்டர் மார்க்ஸ் எனப்படும் உத்தேச மதிப்பெண்கள் அடங்கிய பட்டியலை நாளிதழ்களில் தனியார் பயிற்சி மையங்கள் விளம்பரமாக வெளியிட்டுள்ளன.
2022ஆம் ஆண்டு நீட் பயிற்சி தேர்வுக்காக மாணவர்களை ஈர்ப்பதற்காகவே தனியார் பயிற்சி மையங்கள் இது போன்ற விளம்பரங்களில் ஈடுபடுவது வருத்தமளிப்பதாக கல்வியாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர். நீட் தேர்வு மதிப்பெண்களை வெளியிடுவதன் மூலம் மாணவர்கள் திசை திருப்பப்படுவதாக குற்றம் சாட்டியுள்ள கல்வியாளர்கள், நீட் தேர்வு முடிவை அறிவதற்கு முன் மாணவர்களின் உத்தேச மதிப்பெண்களை வெளியிடுவதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். சேவை மனப்பான்மையை கைவிட்டு லாபகரமான வணிக நோக்குடன் நீட் பயிற்சி மையங்கள் செயல்படுவதாக குற்றம் சாட்டும் கல்வி ஆர்வலர்கள் நீட் தேர்வினால் பயிற்சி மையங்கள் மட்டுமே பலன் அடைவதாக குற்றம்சாட்டுகின்றனர்.