காஷ்மீரில் உள்ளூர்வாசிகளின் எதிர்ப்பால் புதைத்த குழந்தையை வெளியே எடுத்தபோது உயிருடன் இருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜம்மு காஷ்மீரின் ராம்பன் மாவட்டத்தில் பனிஹால் நகரில் இருந்து 3 கிலோமீட்டர் தொலைவில் பங்கூத் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் பஷாரத் அகமது குஜ்ஜார் மற்றும் ஷமீமா பேகம் தம்பதியினர் வசித்து வருகின்றனர். கர்ப்பிணியான பேகம் நேற்று காலை பிரசவித்து இருக்கின்றார். இதில் அவருக்கு பெண் குழந்தை பிறந்து இருக்கின்றது. இருப்பினும் மருத்துவமனை நிர்வாகம் குழந்தை இறந்து விட்டது என தெரிவித்துள்ளது.
இரண்டு மணி நேரம் காத்திருந்து அதன் பின் மருத்துவமனையிலிருந்து குழந்தையை எடுத்துக்கொண்டு ஹல்லான் கிராமத்திற்கு சென்று இறுதி சடங்குகளை செய்து குழந்தையை புதைத்து இருக்கின்றனர். எனினும் அந்தப் பகுதி உள்ளூர்வாசிகள் தங்களது இடத்தில் புதைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து இருக்கின்றனர். இந்த நிலையில் குழந்தையை அதன் பூர்வீக பகுதியில் புதைக்கும் படி கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டு இருக்கின்றனர். இதனால் ஒரு மணி நேரம் கழித்து புதைத்திருந்த குழந்தையை குடும்பத்தினர் வெளியே எடுத்து இருக்கின்றனர்.
இதில் ஆச்சரியப்படும் விதமாக அந்தப் பெண் குழந்தை உயிருடன் இருந்திருக்கின்றது. இதனை தொடர்ந்து உடனடியாக மருத்துவமனைக்கு ஓடி சென்றிருக்கின்றனர். இந்த நிலையில் மருத்துவமனை நிர்வாகத்திற்கு எதிராக குடும்பத்தினரும், மற்றவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதனால் மருத்துவமனை பணியாளர்கள் இரண்டு பேர் சஸ்பெண்ட் செய்யப் பட்டிருக்கின்றனர். இரண்டு மணி நேரம் காத்திருந்தும் மருத்துவமனையின் அலட்சியத்தால் உயிருடன் இருந்த குழந்தையை இறந்து விட்டது என தெரிவித்து அனுப்பி வைத்திருக்கிறார்.
இந்த நிலையில் குழந்தை புதைக்கப்பட்ட பின் உள்ளூர்வாசிகளின் எதிர்ப்புக்கு மத்தியில் ஒரு மணி நேரம் கழித்து புதைகுழியில் இருந்து வெளியே எடுக்கப்பட்ட குழந்தை உயிருடன் இருந்துள்ளது தெரிய வந்திருக்கின்றது. ஒருவேளை அந்த பகுதி மக்கள் எதிர்ப்பு எதுவும் தெரிவிக்கவில்லை என்றால் குழந்தையின் கதி தெரியாமலேயே போயிருக்கும். இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது.