இந்தியாவில் சமீப காலமாகவே ஆன்லைனில் பணம் மோசடி என்பது அதிகரித்துவிட்டது. இது தொடர்பான செய்திகளும் அவ்வப்போது செய்தித்தாள்களில் வந்து கொண்டு தான் இருக்கிறது. இந்நிலையில் நம்முடைய செல்போனுக்கு ஏதாவது ஒரு மெசேஜை அனுப்பி அதை நான் தெரியாமல் கிளிக் செய்யும்போது நம்முடைய வங்கி கணக்கில் இருக்கும் மொத்த பணமும் மாயமாகி விடுகிறது. அதுமட்டுமின்றி வங்கியில் இருந்து மெசேஜ் அனுப்புவது போன்று நாடகமாடி ஏதாவது ஒரு லிங்கை அனுப்பி விடுகின்றனர். இந்த லிங்கை நாம் கிளிக் செய்து நம்முடைய விவரங்களை அதில் பதிவேற்றம் செய்யும்போது நம்முடைய வங்கி கணக்கில் இருக்கும் பணத்தை அபேஸ் செய்து விடுகின்றனர்.
இது தொடர்பான பல்வேறு எச்சரிக்கை அறிக்கைகளை வங்கிகளும், அரசாங்கமும் வெளியிட்டு கொண்டு தான் இருக்கின்றது. இருப்பினும் வாடிக்கையாளர்களின் கவனக்குறைவினாலும், போதிய விழிப்புணர்வு இல்லாமையினாலும் வங்கி கணக்கில் இருந்து பணம் திருடப்படுகிறது. இதன் காரணமாக எஸ்பிஐ வங்கி தற்போது ஒரு எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பின்படி நம்முடைய செல்போனுக்கு வரும் ராங் நம்பர் அழைப்புகளில் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் எனவும், தெரியாத நம்பரில் இருந்து போன் மற்றும் மெசேஜ் வந்தால் ரிப்ளை செய்ய வேண்டாம் எனவும் அறிவுறுத்தியுள்ளது.
அதோடு எஸ்எம்எஸ் போன்று ஏதாவது ஒரு மெசேஜ் வந்தாலும் அதில் இருக்கும் லிங்கையும் கிளிக் செய்ய வேண்டாம் எனவும் எஸ்பிஐ வங்கி அறிவுறுத்தியுள்ளது. ஆனால் நம்முடைய செல்போனுக்கு மெசேஜ் அனுப்பும் மோசடிக்காரர்கள் உங்களுடைய வங்கி கணக்கில் ஒரு லட்ச ரூபாய் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது அந்த பணத்தை எடுக்க வேண்டும் என்றால் லிங்கை கிளிக் செய்யுங்கள் என்று கூறுவார்கள். அதோடு உங்களுக்கு பரிசு பணம் விழுந்துள்ளது, நீங்கள் கோடீஸ்வரர்களாக மாறலாம் என்றெல்லாம் கூறி நம்மை எப்படியாவது லிங்கை க்ளிக் செய்ய வேண்டும் என்பதில் தீவிரம் காட்டுவார்கள். எனவே வாடிக்கையாளர்கள் இது போன்ற மோசடி விவகாரங்களில் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என எஸ்பிஐ வங்கி அறிவுறுத்தியுள்ளது.