அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் விலகுவதாக ஜான் பாண்டியன் தெரிவித்தார்.இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேவேந்திரகுல வேளாளர் அரசாணைக்கு நன்றி செலுத்தும் வகையில்தான் அ.தி.மு.க-பா.ஜனதா கூட்டணிக்கு ஆதரவு அளித்தோம். ஆனால் கடந்த சட்டசபை தேர்தலில் எங்களை பழிவாங்க வேண்டும் என்ற எண்ணத்திலும், நாங்கள் வளர்ந்து விடக்கூடாது என்ற வகையிலும் நாங்கள் விரும்பாத சட்டமன்ற தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கினார்கள். தேர்தலில் நான் பழி வாங்கப்பட்டேன்.
இதனால் தான் நாங்கள் வெற்றி வாய்ப்பை இழந்தோம். தென் மாவட்டங்களில் எங்களுக்கு வாய்ப்பு இருக்கிற தொகுதியில் போட்டியிட அனுமதி அளித்து இருந்தால் நிச்சயம் வெற்றி பெற்றிருப்போம். எனவே அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் விலகுகிறது. ஆனாலும் அ.தி.மு.க. வுடனான உறவு நீடிக்கும். அ.தி.மு.க.வில் இரட்டை தலைமை உள்ளதால் அந்த கட்சி அழிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.
இதனால் கட்சியில் இருந்து பலர் வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள். அ.தி.மு.க.வில் ஒரே தலைமைதான் இருக்க வேண்டும். சட்டமன்ற தேர்தலில் எடப்பாடி பழனிசாமிதான் அதிக அளவில் தேர்தல் பணிகளில் ஈடுபட்டார். தமிழகத்தில் கொங்கு நாடு, ஒன்றிய அரசு போன்ற பிரச்சினைகள் தேவையற்றவை. கொங்கு நாடு என தனியாக பிரித்தால் மதுரையை மையமாக கொண்டு பாண்டிய நாடு என்ற தனி மாநிலத்தை உருவாக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.