சிவகங்கை மாவட்டத்தில் தங்களது இடத்தில் அமர்ந்து மது அருந்துவதை தட்டிக் கேட்டதால் குடிகார கும்பலால் தாக்கப்பட்ட மற்றொரு மருத்துவ மாணவரும் உயிரிழந்துள்ளார். மருத்துவர்களாக பார்க்க ஆசைப்பட்ட மகன்கள் இருவரையும் சடலமாக பார்த்து அவர்களது தாய் கதறிய காட்சி கலங்க வைத்துள்ளது. சிவகங்கை ஆயுதப்படை குடியிருப்பு அருகே முத்து நகரை சேர்ந்தவர் ஓய்வு பெற்ற ஆசிரியர் இருதயராஜ். இவரது மகன்களான ஜோசப் சேவியர், கிரிஸ்டோபர் ஆகிய இருவரும் பிலிப்பைன்ஸ் நாட்டில் எம்பிபிஎஸ் படித்து வந்தனர்.
கொரோனா காரணமாக சொந்த ஊரிலேயே தங்கி ஆன்லைன் மூலம் வகுப்புகளில் படித்து வந்துள்ளார். அங்கு சிலர் மது அருந்திக் கொண்டும் தோட்டத்து வீட்டை அடித்து உடைத்து அட்டகாசம் செய்ததாக ஆடு மேய்த்துக் கொண்டிருந்தவர்கள் இருதயராஜுக்கு தகவல் கொடுத்தனர். அதன்பிறகு தனது இரு மகன்களையும் அழைத்துக் கொண்டு இருதயராஜ் சம்பவ இடத்திற்கு சென்றார். அப்போது அங்கு போதையில் இருந்த 7 பேர் கொண்ட கும்பல் அவர்களை தாக்கியதோடு கிறிஸ்டோபரை கத்தியால் குத்தி உள்ளனர்.
அதனால் சம்பவ இடத்திலேயே கிறிஸ்டோபர் பரிதாபமாக உயிரிழந்தார். சிவகங்கை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் ஜோசப் சேவியர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மருத்துவர்கள் ஆகி பலரது உயிரை காப்பாற்றுவார்கள் என்று எண்ணிய பிள்ளைகள் இருவரின் உயிரையும் காப்பாற்ற முடியாமல் போனதை நினைத்து அவர்களது பெற்றோர் கதறி அழுதனர். இந்த சம்பவம் தொடர்பாக 5 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். இது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.