திமுக முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமியின் ரூ.197.79 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் விற்பனைக்கு வந்துள்ளன. பழனிச்சாமியின் வங்கிக் கடனுக்காக அடமானம் வைக்கப்பட்ட சொத்துகளை விற்பனை செய்வதாகக் கோவை பாரத ஸ்டேட் வங்கி அறிவித்துள்ளது. திமுக சொத்துப் பாதுகாப்புக்குழு உறுப்பினராக உள்ள கே.சி. பழனிச்சாமி, கரூர் தொகுதியில் எம்.பியாகவும், அரவக்குறிச்சி தொகுதி எம்எல்ஏவாகவும் இருந்துள்ளார்.
இந்நிலையில் தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக அவரது பெயரில் உள்ள சொத்துக்கள், அவரது மனைவி அன்னம்மாள், மகன் சிவராமன், மகள் கலையரசி பெயரில் உள்ள சொத்துகளை அடமானம் வைத்து வங்கிகளில் கிட்டத்தட்ட ரூ.200 கோடி வரை கடன் பெற்றிருந்தார். இந்நிலையில் ஸ்டேட் வங்கி உள்ளிட்ட வங்கிகளில் வைக்கப்பட்டுள்ள ரூ.197 கோடி மதிப்புள்ள சொத்துகளின் விற்பனை அறிவிப்பை கோவை பாரத ஸ்டேட் வங்கி வெளியிட்டுள்ளது.
பாரத ஸ்டேட் வங்கி ரூ.81 கோடி, கனரா வங்கி ரூ.57 கோடி, யூனியன் பேங்க் ஆப் இந்தியா ரூ.35 கோடி, ஐடிபிஐ ரூ.24 கோடி என ரூ.198 கோடி சொத்துகள் விற்பனைக்கு வந்துள்ளன. கரூர் வைஸ்யா வங்கி கடனில் பிணையப்படுத்துதலில் முன்னுரிமைப் பிரச்சனை உள்ளதால் அது மட்டும் விற்பனையில் சேர்க்கப்படவில்லை என அந்த விற்பனை அறிவிப்பில் வங்கி கூறியுள்ளது.