பீகார் மாநிலம் சரண் மாவட்டத்தில் லகான் பூர் என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தைச் சேர்ந்த ஒருவரின் இறுதி சடங்கில் கலந்து கொண்ட சிலர் கும்பலாக நின்று ஒரு கடையில் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியே வேகமாக வந்த ஒரு கார் திடீரென சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்களின் மீது பயங்கரமாக மோதியதோடு கடையையும் உடைத்துக் கொண்டு சென்றது. இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்ததோடு 15 பேர் பலத்த காயம் அடைந்துள்ளனர். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த கிராம மக்கள் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
இந்நிலையில் உயிரிழந்தவரின் சடலத்தை கிராம மக்கள் சாலையில் வைத்து போராட்டம் நடத்தியதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்த தகவலின் பேரில் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உயிரிழந்தவரின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனையடுத்து கார் ஓட்டியவர் குடிபோதையில் இருந்ததாக கிராம மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.