கர்நாடக மாநிலம் பாகல்கோட் மாவட்டத்தில் ஜமகண்டி டக்கோடா என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் புஜபலி கர்ஜகி (34) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் இதே கிராமத்தைச் சேர்ந்த வேறொரு சமூகத்தைச் சேர்ந்த பாக்யஸ்ரீ (25) என்ற பெண்ணை காதலித்தார். இந்த காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் இருவரும் பெற்றோரின் எதிர்ப்பை மீறி வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டனர். கடந்த 2 வருடங்களுக்கு முன்பாக புஜபலி மற்றும் பாக்யஸ்ரீ திருமணம் செய்து கொண்ட நிலையில், தற்போது சொந்த ஊருக்கு திரும்பி உள்ளனர்.
இந்நிலையில் ஆஞ்சநேயர் கோவில் பல்லக்கு உற்சவத்தை காண புஜபலி தன் சகோதரர் மகன் சுமேது உடன் கோவிலுக்கு சென்று விட்டு வீட்டிற்கு பைக்கில் சென்றுள்ளார். அப்போது பாக்ய ஸ்ரீயின் தந்தை தம்மன கவுடா தன்னுடைய கூட்டாளிகளுடன் அங்கு சென்று மிளகாய் பொடியை புஜபலிமுகத்தில் தூவி கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார்.
இதைப் பார்த்த சுமேத் தங்கி இருந்து தப்பி ஓடிவிட்டார். இது குறித்து போலீசாருக்கு கொடுக்கப் பட்ட தகவலின் பேரில் தம்மனகாவுடா கைது செய்யப்பட்டுள்ளார். அதன்பிறகு மற்ற குற்றவாளிகளை போலீசார் வலை வீசி தேடி வருகிறார்கள். மேலும் மகள் வேறொரு சமூகத்தை சேர்ந்தவரை திருமணம் செய்து கொண்டது பிடிக்காததால் 2 வருடங்கள் காத்திருந்து மருமகனை ஆணவக்கொலை செய்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.