கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மேலும் ஒரு செவிலியர் உயிரிழந்துள்ளார்.
ராஜீவ் காந்தி மருத்துவமனையில் பணியில் இருந்த 52 வயது பெண் செவிலியர் உயிரிழந்துள்ளார். இவர் கொருக்குப்பேட்டையை சேர்ந்தவர் ஆவார். கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னதாக அதே மருத்துவமனையில் தலைமை செவிலியர் ஒருவர் உயிரிழந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. சென்னையில் மட்டும் பாதிப்புகளின் எண்ணிக்கை 30,000த்தை கடந்துள்ளது.
மேலும் 100க்கும் மேற்பட்ட மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், இன்று செவிலியர் ஒருவர் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவர் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு கொரோனவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். பின்னர் அவர் குணமடைந்த நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு மருத்துவ பணியை மீண்டும் தொடங்கியுள்ளார்.
இந்த நிலையில் அவர் இன்று பணியில் இருக்கும்போது உயிரிழந்துள்ளார். ராஜீவ் காந்தி மருத்துவமனையில் மட்டும் இதுவரை 75 மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் அயனாவரம் இஎஸ்ஐ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் இன்று ராஜீவ் காந்தி மருத்துவனையின் டீனுக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.