இந்தியா முழுவதும் மக்களவை தேர்தல் நடைபெற இருப்பதால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 18_ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற இருக்கின்றது. மக்களவை தேர்தலில் வாக்கு அளிப்பதன் அவசியம் குறித்தும், 100% வாக்குப்பதிவிற்காகவும் மக்களிடையே பல்வேறு வகையில் விழிப்புணர்வு மேற்கொள்ளபட்டு வருகின்றது. இதனால் ஏப்ரல் 18ம் தேதி தமிழகத்தில் நடைபெறவுள்ள தேர்தலில் வாக்களிக்க பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல இருக்கின்றனர்.
மேலும் வாக்குப்பதிவு நடைபெறும் ஏப்ரல் 18ஆம் தேதி அரசு விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்ட நிலையில் ஏப்ரல் 19ஆம் தேதி விடுமுறை எடுத்தால் தொடர்ந்து நான்கு நாட்கள் விடுமுறை தினமாக இருக்கும். இதனால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள மக்கள் தங்களின் சொந்த ஊர்களுக்குச் சென்று வாக்களிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் வாக்களிக்க லட்சக்கணக்கான மக்கள் சென்னையிலிருந்து தங்களின் சொந்த ஊர்களுக்கு செல்ல இருக்கின்றனர். இதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தும் சில தனியார் பேருந்து நிறுவனங்கள், பயணிகளிடம் கூடுதலாக 70 சதவிகித கட்டணம் வசூலிப்பதாக புகார் எழுந்துள்ளது. இதனிடையே பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு சென்று வாக்களிக்க ஏதுவாக இருக்கும் வகையில் கூடுதல் பேருந்துகளை இயக்க அரசு போக்குவரத்து கழகமும் முடிவெடுத்துள்ளது. ஆனால் எத்தனை பேருந்துகள் இயக்கப்படும் என்பது குறித்து இன்னும் முடிவாக வில்லை..